தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வீடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, ஆளுநர் மாளிகை, உயர் நீதிமன்றம், வானிலை ஆய்வு மையம், ஜிஎஸ்டி அலுவலகம், அரசு அலுவலகங்கள், நடிகை த்ரிஷா வீடு என முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், இன்று நள்ளிரவு 1 மணியளவில் தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு மோப்ப நாயுடன் சென்ற போலீசாரும், வெடிகுண்டு செயழிலப்பு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. மிரட்டல் வந்தது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயின் கல்லூரியில் பணியாற்றும் சபிக் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவரை கைது செய்த நீலாங்கரை போலீசார்வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுபோன்று இன்று மதுரை விமான நிலையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.