கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 27) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாகி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கோவையில் பலமுறை விமான நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. கோவையில் இயங்கி வரும் பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்கு மட்டும் இதுவரை சுமார் 15 முறை வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்து பின்னர் சோதனையில் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 26ம் தேதி “படித்தவன் சூதும் வாதும் செய்தால்… போவான்…. போவான்… ஐயோ என்று போவான்!” என்ற பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்தது. இதையடுத்து நடந்த சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று காலை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும், சிட்ரா பகுதியில் உள்ள பாஸ்போர்ட் கேந்ராவிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மிரட்டல்
இந்நிலையில் இன்று பிற்பகல் 1.48 மணியளவில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்தது. தமிழில் எழுதப்பட்டிருந்த இந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து உடனடியாக ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று வந்த மிரட்டல் தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனை குறிப்பிட்டு, “இக்கடிதம் மூலம் உங்களை நலமாக கண்டதாக கருதுகிறேன். எங்களை தேடிப்பிடிப்பது சாத்தியமே இல்லை, ஏனெனில் நாங்கள் உங்கள் மனசாட்சிக்குள் இருக்கிறோம்” என கூறப்பட்டிருந்தது. நேற்று பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டியிருந்த நிலையில் இன்று உதயச்சந்திரன் ஐஏஎஸ் குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஓராண்டாக அவ்வபோது கோவை விமான நிலையம், கமிஷனர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறிய இயலாமல் சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.