பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருக்கும் நிலையில் அவருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது போலீசாரையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் டென்ஷனாக்கியுள்ளது.
கோவையில் தென்னிந்திய இயற்கை மாநாடு இன்று (நவம்பர் 19) நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக கோவை வந்துள்ளார்.
இந்தசூழலில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், “பிரதமர் மோடியின் கோயம்புத்தூர் பயணத்தின்போது குண்டுவெடிப்பு நடத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக உஷாராகினர்.
இதையடுத்து மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலையத்தில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு தேடினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சோதனை செய்தனர். எனினும் வெடிகுண்டும் எதுவும் கிடைக்காததால் அது புரளி என்பது தெரியவந்தது.
பிரதமர் வருகையையொட்டி கோவையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னர்தான் கொடிசியா மைதானத்துக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தசூழலில் பிரதமர் தமிழ்நாடு வந்துள்ள பரபரப்பான சமயத்தில் உயரதிகாரிகளை டென்ஷனாக்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆளுநர் மாளிகை, முதல்வர், துணை முதல்வர் வீடுகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் வீடுகள், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடு, அரவிந்த்சாமி, குஷ்பூ, லிவிங்ஸ்டன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் பாடகி சின்மயி உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
