அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சமீப நாட்களாக பள்ளிகள், ஆட்சியர் அலுவலகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வீடுகள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டி மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது.
நேற்று (ஆகஸ்ட் 26) கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதன்பிறகு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 27) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவிநாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் பாஸ்போர்ட் சேவை மையத்தின் மண்டல அதிகாரி சதீஷின் rpo.cbe@mea.gov.in என்ற பொது மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை ஒரு மெயில் வந்துள்ளது.
அதில், De-Brahminize Dravidistan (திராவிட நாட்டில் இருந்து பிராமணர்களை நீக்குதல்) என்று குறிப்பிட்டு சக்தி வாய்ந்த 4 RDX IED குண்டுகள், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திலும் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. bhagwanthmann@yandex.com என்ற மின்னஞ்சல் முகவரில் இருந்து மிரட்டல் வந்துள்ளது.
இதில், yandex.com என்பது ரஷ்யாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு தேடுபொறியாகும்.
இந்த மின்னஞ்சல் தொடர்பாக கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பீளமேடு காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்று சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
அதேபோன்று கிரீன் வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கும் சந்தேகத்திற்கிடமாக எந்த பொருளும் சிக்கவில்லை.
இந்தநிலையில் வெடிகுண்டி மிரட்டல் விடுத்தது யார்? எங்கிருந்து வந்தது? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த மார்ச், ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களிலும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.