கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 28) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் இல்லங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி, “படித்தவன் சூதும் வாதும் செய்தால்… போவான்… போவான்… ஐயோ என்று போவான்!” என்ற பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்தது.
மேலும், ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை, கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும், சிட்ரா பகுதியில் உள்ள பாஸ்போர்ட் கேந்த்ராவிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர், இந்த மிரட்டல் புரளியாக என்பது தெரியவந்தது.
இந்நிலையில், கோவையில் மூன்றாவது நாளாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர் யார் என்பதை கண்டறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.