நடிகை கௌவுரி கிஷன் ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவரின் அநாகரிகமான கேள்விக்குக் காட்டமாகப் பதிலளித்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
ஆதித்யா மாதவன், கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பில் இன்று (நவம்பர் 7) திரையரங்குகளில் வெளியான படம் அதர்ஸ். பட வெளியீட்டையொட்டி படக்குழு புரோமோஷன், மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது.
இதில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது “கதாநாயகியின் எடை எவ்வளவு?” என்று கதாநாயகனிடம் கார்த்திக் என்ற பத்திரிகையாளர் கேட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அதே பத்திரிகையாளர் படத்தின் இயக்குநரிடம் உடல் எடை ரீதியான மற்றொரு கேள்வியை எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த கௌரி கிஷன், “நீங்கள் தானே எனது எடை என்ன என்று கேட்டது?” என்றார்.
இதற்கு அந்த பத்திரிகையாளர், ஆமாம்… அதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்ப இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
“என்ன தவறா? நீங்கள் என் எடையை கேட்டுள்ளீர்கள், உங்கள் எடை என்ன? கூறுகிறீர்களா.. இல்லை எந்த ஹீரோவிடமாவது இப்படி கேட்டிருப்பீர்களா… என்னுடைய உடல் எடையைத் தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர் உடல் மீதான உரிமை அவருக்கு உண்டு. நான் குண்டாக இருப்பதும், 80 கிலோ இருப்பதும் என்னுடைய சாய்ஸ். நான் என்னுடைய திறமையைதான் பேசவைப்பேன் இது ஒன்றும் நகைச்சுவை இல்லை. நீங்கள் செய்வது பத்திரிகை தொழிலே அல்ல,” என்று ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார்.

இருந்தபோதும் பதிலுக்கு பதில் அந்த பத்திரிகையாளரும் குரலை உயர்த்தியே பேசினார். இந்தசூழலில் அங்கிருந்த மற்ற பத்திரிகையாளர்கள், இது ஒரு காமெடிக்கு என சொல்ல… இதெல்லாம் காமெடியா என மீண்டும் கோபமடைந்தார் கௌரி கிஷன்.
இதுதொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து, கௌவுரி கிஷனுக்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது.
’96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கௌவுரி கிஷனின் துணிச்சலான செயலைப் பாராட்டி ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளரின் “வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு” கௌவுரி கிஷன் கொடுத்த பதிலடி சரியானது என்று குறிப்பிட்டுள்ள பிரேம்குமார், செய்தியாளர் சந்திப்பின்போது ‘அதர்ஸ்’ படத்தின் இயக்குநர் அபின் ஹரிஹரன் மற்றும் கதாநாயகன் ஆதித்யா மாதவன் ஆகியோர் அமைதியாக இருந்ததையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“இத்தகைய கேள்விகளைக் கேட்கும் அவர்களை நான் பத்திரிகையாளர்களாகக் கருத மாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பத்திரிகையாளர் சந்திப்புகளில் அறம் சார்ந்த, நடுநிலையான பத்திரிகையாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே நடிகைகள் குஷ்பு, ரோகிணி, மஞ்சுமா மோகன், பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபாதா, இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் கவின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கௌவுரி கிஷனின் துணிச்சலான நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளனர்.
நடிகர் சங்கமும் கௌவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து, அநாகரிகமான கேள்விகள் எழுப்பிய பத்திரிகையாளரின் செயலைக் கண்டித்துள்ளது.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைதியாக இருந்ததற்காக விமர்சனத்தைச் சந்தித்த நடிகர் ஆதித்யா மாதவன், பாடகி சின்மயின் பதிவின் கீழ் தனது மௌனத்திற்கு மன்னிப்புக் கோரி, உடல் கேலியை ஆதரிக்கவில்லை என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் தனக்கு பலரும் ஆதரவு தெரிவிப்பதற்கு கௌரி கிஷன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
