”பெரியார் பெருந்தொண்டர் பெரம்பலூர் கோவிந்தசாமி” உடல் தானம்- தமிழக அரசு மரியாதை!

Published On:

| By Mathi

Periyarist Govindasamy

“பெரியார் பெருந்தொண்டர்” மறைந்த பெரம்பலூர் கோவிந்தசாமியின் (வயது 86) உடல், அவரது விருப்பப்படி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது. உடல் தானம் வழங்கிய பெரியவர் கோவிந்தசாமியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. திருச்சி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பெரம்பலூர் கிளை மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தந்தை பெரியாரின் தீவிர பற்றாளராக திராவிடர் கழகத் தொண்டராக சிபிஎம் கட்சியின் ஆதரவாளராக செயல்பட்டவர் கோவிந்தசாமி.

ADVERTISEMENT

(படம்: பெரியார் பெருந்தொண்டர் பெரம்பலூர் கோவிந்தசாமி)

சமூக நலன், அரசியல் இவை இரண்டையும் தம் மூச்சாகவே நிறைவாழ்வு வாழ்ந்தவர். கோவிந்தசாமியின் மனைவி சரஸ்வதி, மகள்கள் சாந்தி மற்றும் நளினி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

கோவிந்தசாமி, உள்ளூர் அரசியல் முதல் உலகை மிரட்டும் டிரம்ப்பின் சர்வாதிகார அரசியல் வரை அனைத்தையும் அலசிப் பேசக் கூடியவராகவே வாழ்நாள் முழுவதும் பயணித்தார். யாரை எப்போது சந்தித்தாலும் அதில் ஒரு அரசியல் சார்ந்த உரையாடலை மேற்கொள்ளக் கூடியவராக, பெரியாரியம், கம்யூனிசம் குறித்து எப்போதும் பரப்புரை செய்யக் கூடிய பகுத்தறிவாளராக திகழ்ந்தவர் கோவிந்தசாமி.

ADVERTISEMENT

அனைத்து முற்போக்கு இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும் அதிகமாக நன்கொடைகளை வழங்கக் கூடியவராகவும் இருந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே, மனைவி மற்றும் மகள்கள், திராவிடர் கழக நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து, ”நான் இறந்துட்டா.. என் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமா கொடுத்துடுங்க.. யாரும் அப்போது மறுப்பு தெரிவிக்க கூடாது..” என சொல்லி அதற்கான படிவங்களில் மனைவி, மகள்களையும் கையெழுத்திட வைத்து சான்றிதழையும் பெற்றார் கோவிந்தசாமி. அதே போல தமது இரு கண்களையும் தானமாகவும் வழங்க வேண்டும் என்றும் பதிவு செய்தார்.

ADVERTISEMENT

இதன் பின் அண்மையில் கோவிந்தசாமி, உடல்நலன் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த சூழ்நிலையிலும் கூட, அன்றாட அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் தொடர்ச்சியான ஆர்வம் கொண்டிருந்தார். தம்மால் இயலாத சூழ்நிலையிலும் மனைவி, மகள்களை அழைத்து பத்திரிகைகளை படிக்கச் சொல்லி நாட்டு நடப்புகளை அக்கறையோடு கவனித்தவர். அப்போதும் கூட, தேர்தலில் மு.க. ஸ்டாலின் வென்றுவிடுவார்தானே? விஜய்யால் பாதிப்பு வருமோ? பாஜக- அதிமுக அதிக இடம் வாங்கிவிடுவார்களா? என்றெல்லாம் ஒரு பெரியார் தொண்டராக தமது இனநலன் அக்கறையை வெளிப்படுத்தியவர்.

இத்தகைய பெருவாழ்வு வாழ்ந்த கோவிந்தசாமி, கடந்த மார்ச் 23-ந் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பெரியாரிய- இடதுசாரி- முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தொழிற்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக இறுதி மரியாதை செலுத்தினர்.

உடல் தானம் செய்திருப்பதால் தமிழ்நாடு அரசு சார்பில்
பெரம்பலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அனிதா, பெரம்பலூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன் பெரியவர் கோவிந்தசாமி தமது இரு கண்களையும் தானமாக வழங்கியதால் அதற்கான மருத்துவ நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் பறை அடித்தல் உள்ளிட்ட எந்த ஒரு சடங்கு, சம்பிரதாயங்களும் ’பெரியார் பெருந்தொண்டர்’
கோவிந்தசாமியின் இறுதி மரியாதை நிகழ்வில் மேற்கொள்ளப்படவில்லை.

இதனையடுத்து, பெரம்பலூரைச் சேர்ந்த ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் உதிரம் நற்பணி நண்பர்கள் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் இணைந்து கோவிந்தசாமியின் உடலை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

(படம்: ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன்)

இது தொடர்பாக உடல் தானம் வழங்கும் பணிகளுக்காக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன் கூறுகையில், “ கோவிந்தசாமியின் விருப்பம் மற்றும் குடும்பத்தினர் ஒப்புதல் அடிப்படையில் அவரது உடல் தானம் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் கடந்த 10 ஆண்டுகளில் உடல் தானம் செய்த ஒரே நபர் கோவிந்தசாமிதான்.. தம் இறுதி காலத்திலும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பெரியவர் கோவிந்தசாமி”என்றார்.

சமூகத்தின் மேம்பாடு பற்றி வாழ்நாள் முழுவதும் சிந்தித்து செயல்பட்ட பெரியாரிய பெருந்தொண்டர் கோவிந்தசாமி, வாழ்நாளின் பின்னரும் கண் தானம், உடல் தானத்தால் வாழந்து கொண்டிருக்கிறார்.. ஆம்.. பெரியவர் கோவிந்தசாமி இன்னமும் நம்மை விட்டு மறையவில்லை!

படங்கள்:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share