வந்தே மாதரம்: பாஜகவின் இரட்டை நிலைப்பாடு!

Published On:

| By Minnambalam Desk

BJPs stance on Vande Mataram is a paradox

மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த அந்த மாநிலத்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

டி.கே. சிங்

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் விரக்தியில் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் பொன்னானதொரு வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறார்கள். 

ADVERTISEMENT

பள்ளிகள், கல்லூரிகளில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவதை காங்கிரஸோ அல்லது வேறு ஏதேனும் ஒரு எதிர்க்கட்சியோ எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். தாங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், அதனால் துர்க்கை, சரஸ்வதி மற்றும் லட்சுமி போன்ற இந்து தெய்வங்களாக உருவகப்படுத்தப்படும் ‘தாய் நாட்டை’ ஏற்க முடியாது என்றும் அந்தப் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூறுவதாக நினைத்துப் பாருங்கள். பட்டமளிப்பு விழாவின்போது வந்தே மாதரம் இசைக்கப்பட்டபோது மாணவர்கள் இருக்கைகளை விட்டு எழ மறுத்ததை எண்ணிப் பாருங்கள்.

இவை கற்பனையான சூழ்நிலைகள் அல்ல. கடந்த வாரம் நாகாலாந்தில் இவை உண்மையிலேயே நடந்தன. பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய தேசியப் பாடலுக்கு இழைக்கப்பட்ட இத்தகைய ‘அவமானத்தை’ பாஜக தலைவர் ஒருவர் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், அது நரக வேதனைக்கு ஒப்பானது. அதுவும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு இது நடப்பது இன்னும் கொடுமை. வேறு ஒரு சூழலாக இருந்திருந்தால், அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியை தேசவிரோதிகள், அர்பன் நக்சல்கள், ‘முஸ்லிம் லீக்’ என்று பாஜக தலைவர்கள் முத்திரை குத்தியிருப்பார்கள்; அரசாங்கத்தைக் கலைக்கக்கூடக் கோரிக்கை விடுத்திருப்பார்கள். ஆனால், இந்த நிகழ்வில் பாஜக தலைவர்கள் வாய் மூடி மௌனமாக இருக்கிறார்கள்; இதைக் கவனிக்காததுபோல் கடந்து செல்கிறார்கள்.

ADVERTISEMENT
நாகாலாந்தில் கூட்டணி நிர்ப்பந்தம்

ஏனென்றால், நாகாலாந்தில் இருப்பது காங்கிரஸ் அரசாங்கம் அல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம். நாகாலாந்தின் துணை முதல்வர் ஒய். பாட்டன் பாஜகவைச் சேர்ந்தவர். வந்தே மாதரம் பாடுவதை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட ஆளும் கட்சி, பாஜகவின் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி (NPF). சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேசியப் பாடலுக்கு எதிராகப் பேசிய எம்.எல்.ஏ.க்களும் நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்களே.

மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த நாகாலாந்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த அக்டோபரில், ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி, நாகா மக்கள் முன்னணியுடன் இணைந்தது. மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் நான்கை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இழந்த பின்னணியில் இது நடந்தது.

ADVERTISEMENT

மணிப்பூர் இனக்கலவரத்தில் கிறிஸ்தவ குக்கி இன மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மணிப்பூர் வெளித் தொகுதியையும் (Outer Manipur), நாகாலாந்தின் ஒரே ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, அந்தத் தேர்தல் முடிவுகளுக்கு “ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களே” காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – நாகா மக்கள் முன்னணி இணைப்பு என்பது, அடுத்த தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் உறவை முறிக்க வேண்டியிருந்தால், தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான பிராந்தியக் கட்சிகளின் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, வந்தே மாதரம் விவகாரத்தில் நாகாலாந்து கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி குறித்து பாஜக அஞ்சுகிறது.

2013இல் 60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டமன்றத்தில் ஒரே ஒரு இடத்தில் வென்ற பாஜக, அடுத்த இரண்டு தேர்தல்களில் தலா 12 இடங்களை வென்றுள்ளது. 88 சதவீதம் கிறிஸ்தவ மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தில், பணமும் அதிகாரமும் தேர்தலைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கும் நிலையில், பாஜகவுக்குக் கூட்டணிக் கட்சிகள் தேவைப்படுகின்றன. மேற்கு வங்கத் தேர்தலில் ‘வந்தே மாதரம்’ அவர்களின் முழக்கமாக இருக்கும். ஆனால் நாகாலாந்தில் இருக்காது.

பாஜகவின் முரண்பாடுகள்

பாஜகவின் அரசியலைக் குறிக்கும் பல முரண்பாடுகளில் இது மிக அண்மைக்கால உதாரணம் மட்டுமே. வடகிழக்கு மாநிலங்களிலும் கேரளத்திலும் கிறிஸ்தவ வாக்காளர்களைக் கவர முயலும் அதே வேளையில், மதம் மாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி கிறிஸ்தவர்கள் தாக்கப்படும்போது அது அமைதி காக்கிறது. தில்லியில் மீன் விற்பனையாளர்களை மிரட்டவும், பிகாரில் இறைச்சி, மீன் விற்பனை “வன்முறைப் போக்கை” ஊக்குவிப்பதாகக் கூறிக் கல்வி நிலையங்களுக்கு அருகில் அவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்கவும் பாஜகவால் முடியும். ஆனால் கொல்கத்தாவில், மீனைப் பற்றியும் இறைச்சியைப் பற்றியும் பேச முடியாது. 

பிரதமர் மோடி ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ (அனைவருடன் இணைந்து, அனைவரின் நம்பிக்கை) என்று முழங்கலாம், ஆனால் தனது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமைக்கூடச் சேர்க்க மாட்டார். அவர் ‘இலவசக் கலாச்சாரம்’ நாட்டிற்கு ஆபத்தானது என்று கண்டிக்கலாம், ஆனால் அவரது கட்சியையே அதைப் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

குடும்பக் கட்சிகளை இந்திய ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் என்று அவர் சாடலாம், ஆனால் அதே கட்சிகளைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரவணைக்கலாம். பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த், ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். நாடாளுமன்ற மாநிலங்களவைக்குச் செல்லும் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அவரது வாரிசுத் திட்டத்தை வகுப்பதில் பாஜக ஒரு கருவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில், துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி சுனேத்ரா அரசாங்கத்தில் அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். அவரது மகன் பார்த்த் இப்போது மாநிலங்களவையில் நுழையத் தயாராக இருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற குடும்பக் கட்சிகளைப் பாருங்கள்: சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஜெயந்த் சௌத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம், அனுபிரியா படேலின் அப்னா தளம், எச்.டி. தேவே கவுடாவின் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற), சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (அவர் மத்தியில் அமைச்சராக உள்ளார், அவரது மகன் பிகாரில் அமைச்சராக உள்ளார்), உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (அவரது மனைவி எம்.எல்.ஏ, மகன் பீகாரில் அமைச்சர்), கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி. இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

பாஜகவின் முரண்பாடுகளின் பின்னணியில் சங்மாவைப் பற்றிச் சொல்வதானால், 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேகாலயாவில் உள்ள சங்மா அரசாங்கம் நாட்டின் ஊழல் மிகுந்த அரசாங்கம் என்று பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறியிருந்தனர்.மேகாலயாவில் நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டியும் (NPP) பாஜகவும் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கும்வரை அந்த அரசாங்கத்தில் பாஜகவின் அமைச்சர் ஒருவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிந்ததும், பாஜக மீண்டும் சங்மா அரசாங்கத்தில் இணைந்து மீண்டும் ஒரு அமைச்சரைப் பெற்றுள்ளது.

உள்துறை அமைச்சகம் என்னும் ஆயுதம்

கடந்த காலங்களில் பாஜக இந்த முரண்பாடுகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் பல சட்டமன்றத் தேர்தல்களிலும் அதன் வெற்றிகளே அதற்குச் சான்று. இது பிரதமர் மோடியின் ஈர்ப்பினாலும் இருக்கலாம். பாஜக இலக்குகளை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டே இருப்பதால், அதன் அரசியல் எதிரிகள் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.

தேசியப் பாடலான வந்தே மாதரம் குறித்த அக்கட்சியின் நிலைப்பாடு, அரசியல் ரீதியாக ஒரு பெரிய முரண்பாடு. குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை வெளிப்படையாக மதிக்கும் ஒரு கட்சி, வங்காளத்தின் இந்த இரு அடையாளங்களும் அங்கீகரித்த தேசியப் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பைக் கண்டிப்பது எப்படி? 2047க்குள் வளர்ந்த இந்தியா பற்றிப் பேசும் ஒரு கட்சி, ஒரு தேர்தலுக்காக, நீண்ட காலத்தில் நாட்டிற்கு மிகவும் ஆபத்தான ஒன்றை எப்படிச் செய்ய முடியும்?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வந்தே மாதரம் தொடர்பான உத்தரவைக் கவனமாகப் படியுங்கள். நான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்: “அனைத்துப் பள்ளிகளிலும், ஒவ்வொரு நாளையும் தேசியப் பாடலை இணைந்து பாடுவதன் மூலம் தொடங்கலாம்,” என்று அதில் கூறப்பட்டுள்ளதுடன், அதைப் பிரபலப்படுத்துவதற்குப் பள்ளி நிர்வாகங்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாகாலாந்தில், பட்டமளிப்பு விழாவின்போது வந்தே மாதரம் பாடப்பட்டபோது மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆளும் கட்சியும் வந்தே மாதரம் பாடுவதைப் பகிரங்கமாக எதிர்த்தது. நாகாலாந்தில் பாஜகவுக்கு அவர்கள் தேவைப்படுவதால் அவர்களால் இதைச் செய்ய முடிந்தது. கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் அரசு ஊழியர்கள் ஒரு அதிகாரப்பூர்வ விழாவில் எழுந்து நின்று அதைப் பாடவில்லை என்றாலோ, அல்லது பிகார், உத்தரப் பிரதேசம் அல்லது மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்கள் நாகாலாந்து மாணவர்கள் செய்ததைச் செய்தால் பாஜகவின் எதிர்வினை வேறாக இருக்கும்.

ஒரு மாநிலத்தின் அல்லது மாவட்டத்தின் நிர்வாகம் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அரசியல் ரீதியான ஆயுதமாக்க முடிவு செய்தால், வகுப்புவாத பதற்றங்கள் அன்றாட நிகழ்வாகிவிடும். அங்கேயே ‘விக்சித் பாரத் 2047’ முழக்கமும் கனவும் முடிவுக்கு வந்துவிடும். கடந்த வாரம் நாகாலாந்தில் நடந்த நிகழ்வுகளிலிருந்து பாஜகவும் மத்தியில் உள்ள கூட்டணி அரசாங்கமும் பெற வேண்டிய பெரிய செய்தி இதுதான்.

அது இருக்கட்டும். எத்தனை பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களால் திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வமான தேசியப் பாடலை முழுமையாக ஒப்பிக்க முடியும்? பிரதமர் மோடியும் அமித் ஷாவும் மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து அதைப் முழுமையாகப் பாடும் ஒரு விழாவிற்காகக் காத்திருப்போம்.

பின்குறிப்பு: 2015இல், புது தில்லியில் நடந்த ஒரு பிரமாண்டமான விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சிலுடன் (Isak-Muivah) இந்திய அரசு ஒரு ‘கட்டமைப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது. இறுதி உடன்பாடு எட்டப்படாமல் 11 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கட்டமைப்பு காலியாகவே உள்ளது.

இதற்கிடையில், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாகா அமைதிப் பேச்சுவார்த்தையாளர் ஆர்.என். ரவி, இப்போது மேற்கு வங்க ஆளுநராகியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயல்படும் வழக்கம் அவருக்கு இல்லை என்பதை சென்னை ராஜ் பவனில் அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. இன்னும் சில மாதங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் வங்காளத்திற்கு அவர் ஏன் கொண்டுவரப்பட்டுள்ளார் என்பது விவாதத்திற்குரிய கேள்வி.

கட்டுரையாளர்: டி.கே. சிங், தி பிரிண்ட் (ThePrint) இதழின் அரசியல் பிரிவு ஆசிரியர். 

நன்றி: தி பிரிண்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share