சகாரிகா கோஸ்
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஆளும் பாஜக, சமூக ஊடகங்களில், குறிப்பாக எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்திலும் முகநூலிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருந்தது. அதிநவீன சமூக ஊடகக் கட்டமைப்பு, ஆயிரக்கணக்கான கணக்குகள் (அவற்றில் பல தானியங்கிக் கணக்குகள் ‘bots‘), ட்ரெண்டுகள், மீம்ஸ்கள், வைரல் வீடியோக்கள், ஹேஷ்டேக்குகளை உருவாக்கும் மின்னல் வேகத் திறன் ஆகியவை இந்து வலதுசாரிப் பிரிவினருக்குத் தேசியச் சொல்லாடல்களையும் ஊடகங்களின் முன்னுரிமைகளையும் தீர்மானிக்கும் செல்வாக்கைக் கொடுக்கக் காரணமாக அமைந்தன. பாஜகவின் தொண்டர் படையைப் போலவே வலுவான இந்த இணையப் படையின் வேலைகள் அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கவும் முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆனால் இன்று அதே சமூக ஊடகம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத சுமையாக மாறியுள்ளது. அது மோடி அரசாங்கத்தைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளுகிறது. அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் X-ன் வெறித்தனமான பிடியில் சிக்கியுள்ளனர். ஒருகாலத்தில் மோடியின் ஆன்லைன் படையணியாக இருந்த இந்தச் சமூக ஊடக வீரர்கள், இப்போது கட்டுப்படுத்த முடியாத, நிமிடத்திற்கு ஒரு கூக்குரலை எழுப்பும் குழப்பமான குழுவாக மாறி, ஆலோசனையின் அடிப்படையில் முடிவெடுக்கும் நிர்வாகத்தில் பேரழிவை ஏற்படுத்துகின்றனர். ஒரு காலத்தில் சொத்தாக இருந்தது, இப்போது வேகமாகப் பெரும் சுமையாக மாறி வருகிறது.

ஆன்லைன் படையின் அராஜகங்கள்
அக்டோபர் 6 அன்று, 71 வயதான வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மீது செருப்பை வீசினார். நாட்டின் உயர்மட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்தச் சம்பவத்திற்குக்கூட, அரசாங்கம் உடனடியாகக் கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, வலதுசாரி X படையணி, தலைமை நீதிபதியின் தலித் பின்னணி குறித்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சாதியவாதச் செய்திகளைப் பரப்பி வெறித்தனமான எதிர்ப்பை அரங்கேற்றியது.
அரசாங்கமும் உயர் அமைச்சர்களும் மௌனம் காத்தனர். இது, தங்கள் “விசுவாசமான” ஆன்லைன் வீரர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட X புயலால் உறைந்துபோனதுபோல் காணப்பட்டது. எட்டு மணி நேரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க ட்வீட் செய்வதற்குள், தலைமை நீதிபதிக்கு அது நியாயமான தண்டனை என்ற கருத்து பரப்பப்பட்டு நிலைபெற்றுவிட்டது.
அதிகாரிகள், கூட்டாளிகள் மீதான தாக்குதல்கள்
ஆட்சி வட்டாரத்திற்குள்ளேயே உள்ளவர்கள் மீதும் வலதுசாரி ஆன்லைன் கூட்டம் தாக்குதல் நடத்தியபோது, அரசாங்கம் மௌனம் காத்தது:
- வெளியுறவுச் செயலாளருக்கு அவமதிப்பு: பாகிஸ்தானுடனான ராணுவ மோதல்கள் நிறுத்தப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்த பிறகு, “தேசியவாத” X கணக்குகளால் அவரது மகள் “துரோகி” என்று அவதூறாகப் பேசப்பட்டார். வலதுசாரித் தீவிரவாதிகளுக்குப் பயந்து அரசாங்கம் தனது சொந்த உயர்மட்ட இராஜதந்திரியை ஆதரிக்காமல் கைவிட்டது.
- கூட்டாளிகள் மீது தாக்குதல்: அபுதாபி சுற்றுலாவை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தில் நடிகை தீபிகா படுகோன் முக்காடு அணிந்ததற்காக ஆன்லைனில் தாக்கப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தின் வலுவான நட்பு நாடாக இந்தியா இருந்தாலும், அதன் விளம்பரத்திற்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டிக்காமல் பாஜக அரசாங்கம் மௌனம் சாதித்தது.
- விளையாட்டு உணர்வுக்கு வேட்டு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ‘பாகிஸ்தானைப் புறக்கணி’ என்ற அலறல் பிரச்சாரங்கள், ஆட்டத்தின் முடிவில் இரு நாட்டு அணிகளும் கைகுலுக்க மறுக்கும் நிலைக்கு வழிவகுத்தது. இது சர்வதேச விளையாட்டு மரபுகளுக்கு எதிரானது. கிரிக்கெட் அணியினர் சமூக ஊடக வெறிக்கு இணங்கச் செயல்பட்டது நாட்டின் இமேஜைக் குறைத்தது
இராஜதந்திர உறவுகளில் பாதிப்பு
இந்தக் கட்டுப்பாடற்ற ஆன்லைன் விஷம், இந்தியாவின் இராஜதந்திர உறவுகளையும் உள்நாட்டு நிர்வாகத்தையும் சேதப்படுத்துகிறது:
- சமூக ஊடக இராஜதந்திரம்: பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவளித்ததால், ஆன்லைனில் ‘துருக்கியைப் புறக்கணி’ என்ற போக்கு உருவாக்கப்பட்டது. இராஜதந்திர விவகாரங்களைச் சமூக ஊடகத்திற்கான விவகாரமாக்கும் இந்தப் போக்கு, இந்தியா-துருக்கி உறவுகளைச் சீர்குலைத்து, ஒரு விமான நிலைய ஒப்பந்தத்தை ரத்துசெய்யக் காரணமாக அமைந்தது.
- காஷ்மீர் சிக்கல்: காஷ்மீரிகளைத் தொடர்ந்து ஆன்லைனில் இழிவுபடுத்துவது அங்குள்ள மக்களுடனான தொடர்புகளைச் சீர்குலைக்கிகிறது. ஆன்லைன் கும்பலின் கோபத்திற்குப் பயந்து, பள்ளத்தாக்கு மக்களுடன் மீண்டும் உறவுகளை மேம்படுத்த அரசாங்கம் தயங்குகிறது.
- நீதித்துறை சீர்குலைவு: 2020ஆம் ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில், வலதுசாரி சமூக ஊடகக் கணக்குகளின் தொடர்ச்சியான கதைப்பரப்பல், குற்றவியல் நீதி அமைப்பையே பாதித்து, நீதி மறுக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
- காந்தியை அவமதித்தல்: ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும் மகாத்மா காந்தியின் கொலையாளியான நாதுராம் கோட்சேயின் பெயரை வலதுசாரி ஆன்லைன் குழுக்கள் ட்ரெண்ட் செய்கின்றன. கோட்சேவுக்கான ஆதரவை அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை.
- பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் 2017ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு, சமூக ஊடகங்களில் தங்களைப் ‘பெருமைமிகு இந்துக்கள்’ அல்லது ‘தேசியவாதிகள்’ என்று வர்ணித்துக்கொண்ட சிலர் லங்கேஷின் கொலையைக் குறித்து வெளிப்படையாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். “ஒரு நாய் செத்துப்போனதும் எல்லா நாய்க்குட்டிகளும் ஒரே ராகத்தில் அழுகின்றன” என்று குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த ஜவுளி வணிகர் நிகில் ததிச், 2017 செப்டம்பர் 5 அன்று இந்தியில் பதிவிட்டார்.
- அதே நாளில், மற்றொரு X பயனர் ஆஷிஷ் மிஸ்ரா, “செய்த வினைக்கேற்ற பலன்” (ஜைசே கர்னி, வைசே பர்னி) என்று பதிவிட்டார். அவரது சுயவிவரத்தில் “நான் இந்து, பிரதமர் மோடியின் அணி” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ததிச், மிஸ்ரா ஆகிய இருவரையும் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பின்தொடர்ந்து கொண்டிருந்தார். இந்தப் பதிவுகளுக்காக பாஜகவோ பிரதமரோ அவர்களைக் கண்டிக்கவில்லை.
- அமித் ஷாவின் நீக்கப்பட்ட பதிவு
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் குறித்த ஒரு ட்வீட்டை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பா.ஜ.க-வின் இணையப் படை ஊக்குவிக்கும் ‘வங்கதேச-ரோஹிங்கியா-ஊடுருவல்காரர்’ என்ற பிளவுபடுத்தும் ‘இந்து முஸ்லிம்’ கருத்துக்கு வலுவூட்டவே முஸ்லிம்களின் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் குறித்த ட்வீட்டை ஷா பயன்படுத்தினார்.
- ஆனால், ஷா அதில் மாட்டிக்கொண்டார். ஊடுருவல் அதிகரித்து, இந்தியாவின் முஸ்லிம் மக்கள்தொகை உயர்ந்திருந்தால் (அதுவே சர்ச்சைக்குரியது), அதற்குப் பொறுப்பு அவர்தான். இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்துறை அமைச்சராகிய ஷாவுக்குத்தான் உள்ளது.
- ‘வங்கதேச-ரோஹிங்கியா-ஊடுருவல்காரர்’ என்ற கருத்தானது, பா.ஜ.க. சமூக ஊடகங்களைத் தவறான தகவல்களைப் பரப்புவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் உதாரணமாகும். ஷாவின் ட்வீட் அவருக்கு எதிராகத் திரும்பியதால் அது நீக்கப்பட்டது.

புலி வாலைப் பிடித்த பாஜக
மோடி தலைமையிலான பாஜக ஒரு காலத்தில் சமூக ஊடகப் புலியைத் திறமையாக ஓட்டிச் சென்றது. ஆனால் இன்று ஆளும் நிர்வாக அமைப்பால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தப் புலி இப்போது கட்டுப்பாடில்லாமல் சீறி, கட்சியையும் இழுத்துச் செல்கிறது. சமூக ஊடகக் கணக்குகள் தம்மளவில் சொந்தச் சட்டங்களாக மாறிவிட்டன. அவை இந்த நாட்டின் சட்டங்களையோ அரசியலமைப்புச் சட்டக் கட்டுப்பாடுகளையோ அங்கீகரிக்கவில்லை. அரசாங்கத்தையே மண்டியிட வைக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாக மாறிவிட்டன.
அரசாங்கம் பொது நலனில் அக்கறை செலுத்தி, X-ன் வெறித்தனத்தைப் புறக்கணித்து, நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டும். ஆனால், மோடி அரசாங்கம் X-இன் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறது. தான் உருவாக்கிய பூதத்தின் ஏவலாளாகமாறி, சமூக ஊடகக் கூக்குரலுக்கு அடிபணிகிறது.

சகரிகா கோஷ் திருணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.
நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்
https://theprint.in/opinion/bjp-social-media-asset-modi-govt-liability/2763215/
