ADVERTISEMENT

வரலாற்று முச்சந்தியில் காங்கிரஸ்: பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து குடியரசை மீட்கும் பாதை எது?

Published On:

| By Minnambalam Desk

BJPs political tactics and Congress confusion

ராஜன் குறை

காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் விடுதலைப் போரை முன்னின்று நடத்தியது. காந்தியின் தன்னிகரற்ற ஆளுமைதான் காங்கிரஸ் கட்சியை வெகுஜன இயக்கமாக மாற்றியது. ஜவஹர்லால் நேருவின் ஆட்சித் திறன்தான் குடியரசு உருவானபோது அதனை வழி நடத்தி, புதிய தேசத்திற்கான எண்ணற்ற நிறுவனங்களை உருவாக்கி, கட்டிக் காத்தது. அதன் பிறகும் இந்தியாவை வறுமையிலிருந்து மீட்டு, மக்கள் நல திட்டங்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை சாதித்தது.

முதல் மூன்று பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே ஒன்றிய அரசாங்கத்தையும், அனைத்து மாநில அரசாங்கங்களையும் பெரும்பான்மை பெற்று உருவாக்கியது. ஒரே விதிவிலக்கு கேரளாவில் 1957-ஆம் ஆண்டு அமைந்த கம்யூனிஸ்டு அரசாங்கம். அது விரைவிலேயே கலைக்கப்பட்டது. ஆனால் 1964-ஆம் ஆண்டு நேருவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் பல மாநிலங்களில் தோல்வி கண்டது.

ADVERTISEMENT

இதற்குக் காரணம் காங்கிரஸ் கருத்தியல் கலவையாக இருந்ததால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அளவில் வலுதுசாரிகளும், இடதுசாரிகளும், மாநில அளவிலான அரசியல் அணிசேர்க்கைகளும் இணைந்து பல மாநிலங்களில் ஆட்சியமைத்தன. ஆனால் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இந்த கலவைக் கூட்டணிகள் நிலைக்கவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததுடன் திராவிட-தமிழர் என்ற தன்னுணர்வு கொண்ட அரசியல் தொகுதியை கட்டமைத்துவிட்டது.

BJPs political tactics and Congress confusion

இந்திரா காந்தி தன்னுடைய தலைமையின் கீழ் மீண்டும் பல மாநிலங்களில் காங்கிரசை வெகுஜன கட்சியாக வலுப்படுத்தினார். ஆனால் காங்கிரஸின் அகில இந்திய தலைமையின் பிடியில் இருக்கும் அமைப்புகளாகவே மாநில காங்கிரஸ் கட்சிகள் மாறின. மாநில அளவிலான தலைமையின் முக்கியத்துவம் குறையத் துவங்கியது. இதனால் பல மாநிலங்களில் மாற்று அணி சேர்க்கைகள் வலுவடைந்தன. குறிப்பாக நெருக்கடி நிலை காலம், ஜனதா கட்சியின் குறுகிய கால ஒன்றிய ஆட்சிக்குப் பிறகு, ஜனதா கட்சியின் மாநிலக் கிளைகள் எல்லாம் வேர் பிடித்து பல்வேறு மாநில கட்சிகளாக வளரத் துவங்கின.

ADVERTISEMENT
BJPs political tactics and Congress confusion

இந்திரா காந்தியின் படுகொலையை அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ராஜீவ் காந்தி பெற்றாலும், அதனால் மாநிலங்களில் பழைய இடத்தை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் இந்திய அரசியலில் இரண்டு துருவ முனைகள் உருவாகத் துவங்கின. ஒன்று அகில இந்திய மைய ஈர்ப்பு விசை சக்தியாக,வலதுசாரி இந்துத்துவத்தைப் பேசும் பாரதீய ஜனதா கட்சி, மற்றொன்று மைய விலக்கு விசை சக்திகளாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் தொகுதிகளை ஒருங்கிணைக்கும் மாநில அணி சேர்க்கைகள்.

மாநில கட்சிகளும், மூன்றாவது அணியும்

காங்கிரஸ் மைய ஈர்ப்பு விசையின் வலதுசாரியும் இல்லாத, இடதுசாரியும் இல்லாத கலவையான முந்தைய வடிவமாகவும், பாஜக மைய ஈர்ப்பு விசையின் கலப்படமில்லாத வலதுசாரி வடிவமாகவும் மாறின. மாநில கட்சிகள் எல்லாம் சோஷலிச மைய விலக்கு விசைகளாக விளங்கின. மாநிலங்களில் செல்வாக்கு பெறும் கட்சிகள் தங்களை மாநில அடையாளத்தை முதன்மைப்படுத்துவதாக  சொல்லிக் கொள்ளாவிட்டாலும் கூட அவை மாநில அடையாள அணி சேர்க்கைகளாகவே இருந்தன.

ADVERTISEMENT

உதாரணமாக சி.பி.ஐ (எம்) தேசிய நோக்கு கொண்ட தேசியக் கட்சியாக கூறிக்கொண்டாலும் அதன் கேரளா பிரிவும், மேற்கு வங்க பிரிவும் முழுவதும் மாநில அடையாளம் சார்ந்து இயங்கி வந்தன என்பதைக் கவனமாகப் பரிசீலித்தால் புரிந்துகொள்ள முடியும். அதே போல தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிராவிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் இயங்கினாலும் அந்தந்த மாநில அடையாளங்களுடன் மட்டுமே இயங்கியது.

BJPs political tactics and Congress confusion

இந்த நிலையில்தான் 1989-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசின் மீதான அதிருப்தி அலை வீசியபோது காங்கிரஸ், பாஜக, மற்றும் மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணி என்ற மூன்று அணிகள் போட்டியிட்டன. மூன்றாவது அணியால் பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும் பாஜக வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் பதினோரு மாதங்கள் வி.பி.சிங் தலைமையில் ஆட்சி செய்தது. அந்த இடைவெளியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி பிற்படுத்தப்பட்டோர் அரசியலை திட்டவட்டமாக வலுப்படுத்தியது. இதற்கு எதிர்முனையில் பாஜக அயோத்தி ராமர் கோயில் அரசியலை முன்னெடுத்தது.

 இப்படி மண்டல் x மந்திர் என்ற இரண்டு கருத்தியல் முனைகள் உருவானபோது காங்கிரஸ் இரண்டு பக்கத்திலும் இல்லாமல் நடுவில் மாட்டிக் கொண்டது  ஆனால் 1991 தேர்தலின் மத்தியில் ராஜீவ் காந்தி படுகொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையில் காங்கிரஸ் நரசிம்ம ராவ் தலைமையில் ஆட்சியமைத்தது. அந்த நேரத்தில் சோவியத் யூனியன் தகர்ந்து போனதால் அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் ஒரு துருவ உலகம் உருவானதாகக் கருதப்பட்டது. 

BJPs political tactics and Congress confusion

அத்தகைய உலக பொருளாதார சூழலை அனுசரித்து நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அந்நிய முதலீடுகளை அனுமதித்தும், தனியார் மயமாதலை முன்னெடுத்தும், சுதந்திர சந்தை பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தும் உலகமயமாதலை நடைமுறைப்படுத்தியது. இது முதலீட்டிய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டாலும், வேர்மட்ட சமூக அமைப்புகளை பாதுகாப்பற்று உணர வைத்தது.

இதனால் 1996-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் மூன்றாவது அணி ஆட்சி அமைந்தது. இந்த முறை காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் இரண்டு பிரதமர்களைக் கண்ட அந்த மூன்றாவது அணி ஆட்சி காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது.

BJPs political tactics and Congress confusion

ஒன்றிய அரசாங்கத்தில் கூட்டணி ஆட்சி  (1996-2014)

இவ்வாறு நிலையான அரசு உருவாக முடியாத சூழலில் பாரதீய ஜனதா கட்சி மாநில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. வாஜ்பேயி தலைமையில் 1998-இல் அமைந்த ஆட்சி, ஜெயல லிதாவின் அ.இ.அ.தி.மு.க ஆதரவை விலக்கிக் கொண்டதால் கவிழ்ந்தது. அப்போதுதான் வேறு வழியில்லாமல் தி.மு.க தன் கருத்தியல் எதிரியான பாஜக-வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் உருவானது. இரண்டாவது முறை 1999-இல் குறைந்தபட்ச வேலைத்திட்டத்துடன் வாஜ்பேயி தலைமையில் உருவான கூட்டணி ஆட்சி ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்தது.

அந்த ஆட்சியின் மீதான அதிருப்தி, இடையில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் பாஜக ஆட்சியில் நிகழ்ந்த மிகப்பெரிய கலவரத்தில் நிகழ்ந்த முஸ்லீம்கள் படுகொலை ஏற்படுத்திய அதிர்ச்சி ஆகிய காரணங்களால், 2004 ஆம் ஆண்டு தி.மு.க உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபை அமைத்தது.

BJPs political tactics and Congress confusion

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட இந்த கூட்டணி பொருளாதார அறிஞர் மன்மோகன் சிங் தலைமையில் பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சியைத் தந்தது. MGNREGA – மன்ரேகா என்ற மகாத்மா காந்தி ஊரக வேலை உத்திரவாதத் திட்டம் என்ற புரட்சிகர திட்டத்தை அறிமுகப்படுத்தியது.     

BJPs political tactics and Congress confusion

மன்மோகன் சிங் ஆட்சியின் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் திட்டமிட்ட அதிருப்தி அலை உருவாக்கப்பட்டு, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி வளர்ச்சியின் அடையாளமாகக் கட்டமைக்கப்பட்டு 2014-ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின் படிப்படியாக ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல்வேறு நிறுவனங்களை கைப்பற்றி குடியரசின் விழுமியங்களை மெள்ள, மெள்ள சிதைக்கத் துவங்கியது.

இன்றைய நிலையில் குடியரசின் கட்டமைப்பு முழுவதையுமே சிறுகச் சிறுக மாற்றி தன்னுடைய ஆட்சியை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் எப்படியாவது நிறுவ வேண்டும் என பாஜக முயல்கிறது. மைய ஈர்ப்பு விசையின் உச்சபட்ச வடிவமாக இயங்குகிறது. எதேச்சதிகாரப் போக்கு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசும், மாநில கட்சிகளும் இந்தியா கூட்டணி என்று ஒன்றை உருவாக்கினாலும், பாஜக பெரும்பான்மை பெறாமல் தடுக்க முடிந்ததே தவிர ஆட்சியமைக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் அடுத்தது என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெருகிறது.

காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவுகளின் வரலாற்று உருமாற்றங்கள்

காங்கிரஸ் கட்சியின் மூல மரபணுக்கூறுகள், டிஎன்ஏ (DNA) என்று ஆங்கிலத்தில் கூறுவது ஆங்கிலம் படித்த, நகர்புற குடிமைச் சமூகம்தான். எல்லா காலங்களிலும் அந்த கட்சியின் முதுகெலும்பு அதுதான். அது உருவாக்கும் கருத்தொப்புமை அரசியல்தான் அதனைச் செலுத்தும் விசை.

ஆனால் இந்திய தேர்தல்களை எதிர்கொள்ள இது மட்டும் போதாது என்பதால் என்பதால் அது நில உடமைச் சக்திகளின் ஆதரவைப் பெற்றது. மூன்றாவதாக காந்தீய வேலைத்திட்டங்களின் காரணமாக பல அடித்தட்டு, விளிம்பு நிலை சமூகங்களின் அணிசேர்க்கைகளையும் இணைத்துக் கொண்டது.

நாம் மேலே சொன்ன வரலாற்றுப் போக்கில், கடந்த ஐம்பதாண்டுகளில் நில உடமைச் சக்திகளும் சரி, பிற அடித்தட்டு விளிம்பு நிலைச் சக்திகளும் சரி மாநில அளவிலான கட்சிகளாக உருமாறிவிட்டன. ஏனென்றால் அவற்றின் நலன்களை பாதுகாக்க மாநில அரசுகளை அமைப்பதுதான் முக்கியம் என்பதே காரணம்.

மற்றொருபுறம் பெருமுதலீட்டியச் சக்திகளும் தெளிவான வலதுசாரியாக விளங்கும் பாஜக-வை ஆதரிக்கத் துவங்கி விட்டன. பாஜக-வின் கருத்தொப்புமை உருவாக்கம் என்பது மத அடையாளவாதம் மற்றும் சிறுபான்மை வெறுப்பரசியலாக இருப்பதால், அதற்கு பொருளாதார தளத்தில் மக்கள் நல திட்டங்களையோ, சோஷலிச அணுகுமுறையையோ மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. அதனால் பெருமுதலீட்டியத்திற்கு பாஜக-வே வசதியாக உள்ளது.

இப்போது காங்கிரஸின் குடிமைச்சமூக தளம் எந்த பக்கம் நகர்வது என்பதில் ஒரு சிக்கலைச் சந்திக்கிறது. மாநில அரசியல் சக்திகள் மாநில மொழிகளிலேயே இயங்குவதால், பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலையினர் அணிசேர்க்கையாக இருப்பதால் ஆங்கிலவயப்பட்ட அந்த உயர்தட்ட, உயர் மத்தியதர வர்க்க ஆதிக்க ஜாதி , அதிக அளவில் பார்ப்பனர்களைக் கொண்ட குடிமைச் சமூகம் அவற்றிலிருந்து அந்நியமாக உணர்கிறது, அவற்றை அஞ்சுகிறது. அதே சமயம் அதற்கு பாஜக-வின் மத அடையாளவாதம், அதன் வன்முறை வெளிப்பாடுகளும் உவப்பாக இல்லை.

பாஜக-வின் செயல் தந்திரமும், காங்கிரஸின் குழப்பமும்

பாஜக மாநில அரசியல் களங்களை ஊடுறுவ ஒரு குறுக்கு வழியைக் கையாளத் தொடங்கியுள்ளது. அதனை ஆங்கிலத்தில் Social Engineering, சமூக இயந்திரவியல் என்பார்கள். அது என்னவென்றால், பல்வேறு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக தலைவர்களையெல்லாம் பதவிகளையும், சலுகைகளையும் தந்து தங்களுடன் இணைத்துக்கொள்வது. அந்த மக்கள் தொகுதிகளுக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ, தலைவர்களை தங்கள் வசப்படுத்துவது. தேவைப்பட்டால் அவர்கள் மீது விசாரணை அமைப்புகளை ஏவி அவர்களை தங்கள் பிடிக்குள் கொண்டுவருவது.

நகர்புற மத்தியதர வர்க்கத்திற்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் பெரும் ஈடுபாடு இருப்பதால் மாநில மொழியில் இயங்கும் கட்சிகள்மீது தொடர்ந்து ஊழல் பெயிண்ட் அடிப்பது முக்கியமான செயல்முறை. அப்படி குற்றம் சாட்டப்பட்ட தலைவர்களே பாஜக பக்கம் வந்துவிட்டால், அந்த பெயிண்ட்டை கழுவி விடும் பாஜக. இதனை வாஷிங் மெஷின் அரசியல் என்று கூறுகிறார்கள். பெரும்பாலான ஊடகங்கள் பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதால் இதனைச் செய்வது மிகவும் சுலபமாக இருக்கிறது.

BJPs political tactics and Congress confusion

பாஜக நேரடியாகப் பங்கேற்ற ரஃபேல் விமான பேர ஊழல், தேர்தல் பத்திர திட்ட ஊழல், அதானி பங்குச்சந்தை முறைகேட்டு ஊழல், வங்கிக்கடன் தள்ளுபடி ஊழல்கள், கட்டுமானப் பணி ஊழல்கள், பி.எம்.கேர்ஸ் நிதி மர்மம் ஆகிய எந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பினாலும் அது பாஜக ஊடகத் திரையை கடந்து மக்களிடம் எடுபடுவதில்லை. காங்கிரஸால் இந்த பிரச்சினைகளை மக்கள் பரப்பில் கொண்டு செல்ல இயல்வதில்லை; அதற்கான அமைப்பு பலம் பல மாநிலங்களிலும் இல்லை.

இந்த ஊழல்கள் தொடர்பாகவும் சரி, தேர்தல் முறைகேடுகள் தொடர்பாகவும் சரி ராகுல் காந்தி தீவிரமாகக் குரல் எழுப்புகிறார். குடிமைச் சமூக தளமும் பிளவுண்டிருப்பதால் அவர்களும் அவர் குரலை எதிரொலிப்பதில்லை. மாநில மொழிகளில் காங்கிரசிற்கு அமைப்பு பலம், ஆள்பலம் இல்லாததால் ராகுல் காந்தி குரலை மாநிலக் களங்களிலும் எடுத்துச் செல்ல இயல்வதில்லை. ராகுல் காந்தியின் குரல் நாடெங்கும் எதிரொலிப்பதில்லை. அவர் பேசுகிறார். அது ஊடகங்களில் வருகிறது. அதன்பின் அப்படியே காற்றில் கரைந்து போகிறது. அரசியல் இயக்கமாக மாறுவது இல்லை.  

காங்கிரஸ் முன்னுள்ள தேர்வுகள்

நாட்டிலுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 423 தொகுதிகள் பன்னிரெண்டு பெரிய மாநிலங்களில்தான் உள்ளன. அதாவது 20 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளவை.  அவற்றின் அட்டவணை கீழே.

இவற்றில் தேர்தல் சார்ந்த முரணரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக உள்ள மாநிலங்கள் ஐந்துதான். அவற்றின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 128 தான். மீதமுள்ள 300 தொகுதிகளில் மாநில கட்சிகள் ஆதரவு இருந்தால்தான் காங்கிரஸ் சில உறுப்பினர்களைப் பெற முடியும். அந்த மாநில கட்சிகள் ஆதரவு அளித்தால்தான் பாஜக-வை ஆட்சிக் கட்டியலிலிருந்து அகற்ற முடியும்.  காங்கிரஸ் கட்சி முக்கிய கட்சியாக உள்ள மாநிலங்களிலும் கர்நாடகாவில் மட்டுமே அது ஆட்சியில் இருக்கிறது.

இந்த நிலையில் அது பாஜக-வுடன் போராடி குடியரசைக் காக்க வேண்டுமென்றால் தர்க்க ரீதியாக இரண்டு வழிகள் உள்ளன எனலாம்:

முதல்வழி கூட்டணி: தேசிய அளவில் ஒரு வலுவான குடிமைச் சமூகக் கட்சியான காங்கிரஸ் மீண்டும் ஒன்றிய அரசாங்கத்தில் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் மாநில கட்சிகளின் ஆதரவில்லாமல் சாத்தியமேயில்லை என்பது தெளிவு. மாநில கட்சிகள் எல்லாமே, சி.பி.ஐ (ஏம்) உட்பட பாஜக-விற்கு தீவிரமான எதிர்நிலையில்தான் உள்ளன என்பதால் அவற்றின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சியமைப்பது சாத்தியம்தான்.

இரண்டாம் வழி தனிவழி: இல்லையென்றால் இன்னொரு பாதை இருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கட்சிகளுடன் போராடி, காங்கிரஸை மாநிலங்கள் அளவில் வலுப்படுத்தி பின்னர் காங்கிரஸே தனித்து பாஜக-விற்கு எதிரான மைய ஈர்ப்பு தேசிய சக்தியாக களம் காண்பது. இந்த இரண்டாவது வழிமுறை இலட்சியவாத நோக்கில் கவர்ச்சியாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமற்ற கற்பனை.

காங்கிரஸின் நில உடமை ஆதரவு தளங்கள் பெரும்பாலான மாநிலங்களில் ஒன்று பாஜக பக்கமோ அல்லது மாநில கட்சிகள் பக்கமோ சென்றுவிட்டன.  காங்கிரஸின் குடிமைச் சமூக தளமும் டில்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியிடம் கணிசமாகச் சென்றுவிட்டது. இழந்த ஆதரவு தளங்களை மீட்பது என்பது சுலபமல்ல.

ஒரே நேரத்தில் காங்கிரஸ் மைய ஈர்ப்பு விசை சக்தியான பாஜக, மைய விலக்கு விசை சக்திகளான மாநில கட்சிகள் ஆகிய இரண்டு விசைகளுடனும் போராட முடியாது. காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. அப்படியானால் அது மைய விலக்கு விசை அரசியலைத்தான் மேற்கொள்ள வேண்டும்.

என்ன பிரச்சினையென்றால் மாநில அரசியல் களங்களில் மாநில கட்சிகள் வேரூன்றி விட்டன. பாஜக பலவிதமான தந்திரங்களால் உள்நுழைந்து மாநில கட்சிகளை ஊடுறுவி தன்னையுடைய ஆதரவு தளத்தை கட்டமைக்க முயல்கிறது. இந்த நேரத்தில் காங்கிரஸ் மாநில முரணரசியல் களத்தில் தனக்கான தளத்தை உருவாக்குவது மிகவும் கடினம். காங்கிரஸால் அதன் அரசியல் மைய ஈர்ப்பு விசையா, மைய விலக்கு விசையா என்றே தீர்மானம் செய்ய முடியாது என்பதால் பரிதாபமாக அடிபட்டுப் போகும்.  

வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் காங்கிரஸ் கட்சியின் தலைமை, குறிப்பாக ராகுல் காந்தி இலட்சியவாத மயக்கத்தில் இருப்பது போலத் தெரிகிறது. அவர் மாநில கட்சிகளை பகைத்துக்கொள்ள முயல்கிறார். அவற்றிடம் அதிக தொகுதிகளைப் பெற்றுவிட்டால் கட்சியை வளர்த்துவிடலாம் என மனமயக்கம் கொள்கிறார். அவருடைய குடிமைச் சமூக ஆலோசகர்களுக்கு வேர் மட்ட அரசியல் பற்றிய எந்த புரிதலும் இல்லை என்பதால் தவறாக வழி நடத்துகிறார்கள்.

இதன் மிக மோசமான வெளிப்பாடுதான் கேரளாவில் அவர் சி.பி.ஐ (எம்)-மும் பாஜக-வும் இணைந்து காங்கிரஸை எதிர்ப்பதாக பேசியிருப்பது. எதிரிக்கு எதிரி நண்பன் என முரணரசியலில் கூறலாம். ஆனால் எனக்கு இரண்டு பேர் எதிரிகள் என்பதால் அவர்கள் நண்பர்கள்தான் என்று கற்பனை செய்வது அபத்தம். ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு அவர் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அவர் தன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது நாட்டு நலனுக்கு நல்லது.

கட்டுரையாளர் குறிப்பு:  

BJPs political tactics and Congress confusion - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share