தமிழக பாஜகவின் “பூத் வலிமைப்படுத்தும் பயணம்” திட்டத்தின் முதல் மாநில மாநாடு ஆகஸ்ட் 17-ந் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். Nainar Nagendran BJP Tamil Nadu

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாஜகவின் “பூத் வலிமைப்படுத்தும் பயணம்” திட்டத்தின் மாநில பயிலரங்கை இன்று ஜூலை 6-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தேன். இதன் தொடர்ச்சியாக பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின், முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு எப்படி தயாராக வேண்டும்? தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது கட்சியை எப்படி பலப்படுத்த வேண்டும்? தேர்தல் நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும்? உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்தக் கூட்டத்தில் பூத் முகவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா,முன்னாள் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திருமதி. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பெயர் இல்லை
சென்னையில் இன்று நடைபெற்ற பூத் முகவர்களுக்கான மாநிலப் பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பட்டியலில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.