பீகார் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை துணை ஜனாதிபதியாக்க திட்டமிடுகிறது பாஜக என பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷன் தாக்கூர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. Bihar Nitish Kumar
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா பல கேள்விகளை எழுப்பி உள்ளது. மத்திய அரசால் அவமதிக்கப்பட்டதால்தான் ஜெகதீப் தன்கர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தாரா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஜெகதீப் தன்கரின் ராஜினாமா விவகாரம் நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது.
இந்த நிலையில் பீகார் பாஜக எம்.எல்.ஏ., ஹரிபூஷன் தாக்கூர், ஜெகதீப் தன்கரின் ராஜினாமா பீகாருக்கு நல்ல செய்தி; முதல்வர் நிதிஷ்குமார், துணை ஜனாதிபதியாகிறார் என கூறியிருப்பதும் விவாதமாகி இருக்கிறது.
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் இந்த முறை பீகாரில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு தேர்தல் களம் மிகவும் சவாலாக இருக்கும் என்பது பொதுவான கருத்து.
இதனால் பீகார் தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என போராடுகிறது பாஜக. இதன் ஒரு பகுதியாகவே தற்போது ஜெகதீப் தன்கரின் ராஜினாமா அரங்கேறி இருக்கிறதாம்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருக்கக் கூடிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங் பெயர் அடுத்த துணை ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது. அதனால் ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பதிலாக அதே ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை, துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி பாஜக வெற்றி பெற வைக்கலாம்; அப்படி செய்தால் பீகாரைச் சேர்ந்த ஒருவருக்கு நாட்டின் உயரிய பதவியை கொடுத்தோம் என்ற முழக்கத்துடன் பீகார் தேர்தலை எதிர்கொண்டு எளிதாக வெல்ல முடியும் என்றும் பாஜக கணக்குப் போடலாம். இதனையே பாஜக எம்.எல்.ஏ.வும் சுட்டிக்காட்டி இருக்கிறார் என்கின்றனர்.