ADVERTISEMENT

பாஜகதான் அமமுகவுக்கு தொகுதிகளை ஒதுக்கும்.. ஓபிஎஸ் மீது கடும் தாக்கு.. டிடிவி தினகரன்

Published On:

| By Mathi

TTV Dhinakaran AIADMK

பாஜக- அதிமுகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகதான் அமமுகவுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பிப்ரவரி 22-ந் தேதி செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: நான் பாஜக கூட்டணியில தான் இணைந்தேன். அதன் மூலம் பாஜக-
அதிமுக கூட்டணி என்கிற NDA கூட்டணியில நான் இணைந்து இருக்கிறேன். எனது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கான தொகுதி உடன்படிக்கை என்பது பாஜக மூலம் தான் நடைபெறும், இன்னும் அதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவில்லை, ஆரம்பித்த பிறகு நான் சொல்வேன்.

ADVERTISEMENT

நான் ஏற்கனவே NDA கூட்டணியில்தான் இருந்தேன். அப்ப அண்ணா திமுக அதில் இல்லை. அண்ணா திமுக வந்த பிறகு நான்கு மாதங்களில் நாங்க NDA-ல் இருந்து வெளியேறியது. மீண்டும் NDA–கூட்டணிக்கு வந்தோம், பாஜக கூட்டணியில் இணைந்தோம்.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் எது எதுங்கிறதை முதல்ல நீங்க தெரிஞ்சுக்கோங்க, அதுல அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இருக்கு. பாஜக கூட்டணியில் உள்ள அமமுக, அதிமுகவோட கூட்டணி வைத்திருக்கிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை.

ADVERTISEMENT

பசுத்தோல் போர்த்திய புலி ஓபிஎஸ்

ஓ.பி.எஸ், அரசியலில் தொடர வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் நிலைப்பாடு என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அது அவருடைய உரிமை. ஆனால், சட்டமன்றத்தில் ஐயப்பனைப் பேச வைத்தது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைத் தெய்வமாகப் போற்றும் கோடிக்கணக்கான தொண்டர்களின் மனத்தைக் காயப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தி.மு.க என்கிற தீய சக்தியை எதிர்த்துத் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் எம்ஜிஆர். அவர் உயிரோடு இருந்த 15 ஆண்டுகள் தி.மு.க-வை ஆட்சிப் பொறுப்புக்கு வரவிடாமல் தடுத்தவர்.

1991 முதல் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தியதோடு மட்டுமல்லாமல் தி.மு.க-வை வலுவாக எதிர்த்த ஒரு மாபெரும் அரசியல் சக்தி ஜெயலலிதா.

இன்று பிரதமர் மோடி கூட, “ஜெயலலிதா ஒரு மாபெரும் பெண்சக்தி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியவர், நான் எப்பொழுது தமிழ்நாடு வந்தாலும் ஜெயலலிதாவின் பெயரைச் சொன்னால் தமிழ்நாட்டு மக்களின் முகத்தில் ஒரு பிரகாசம் வருவதை என்னால் உணர முடிகிறது’ என்று உலகமே வியந்து பாராட்டும் ஒரு தலைவரைப் பாராட்டியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எம்ஜிஆர்- ஜெயலலிதா ஆசியுடன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று கூறியது மிகவும் வேதனைக்குரியது மற்றும் கண்டனத்திற்குரியது. பன்னீர்செல்வம் ஒரு ‘பசுந்தோல் போர்த்திய புலி’யாக இவ்வளவு காலம் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்வளவு வக்கிர மனநிலை இருந்தால் எம்ஜிஆரின் தொண்டர்களையும், ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான தொண்டர்களையும் அவர் இழிவுபடுத்தியிருப்பார் என்பதுதான் எங்களது வருத்தம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share