2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்காக தவெக தலைவர் விஜய்யை பாஜக மிரட்டுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
ஓசூரில் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கூட்டணிக்காக விஜய்யை பாஜக மிரட்டுவது வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சர்ட்டிபிகேட் கூட தரவில்லை. அந்த படத்துக்கு சென்சார் சர்ட்டிபிகேட்டை தராமல் தேவையில்லாமல் இழுத்தடிக்கின்றனர்.
தங்கள் கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. பாஜக ஒரு வாஷிங் மெஷின் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதாவது பாஜக ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்; அதே நபர் பாஜகவில் இணைந்துவிட்டால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டுவிடும்.. இதுதான் பாஜக.
அரசியல் லாபங்களுக்காக அரசு முகாமைகளை பாஜக பயன்படுத்தி வருகிறது. பாஜக என்ன செய்கிறது என்பதை மக்கள் நன்றாகவே கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
