மக்களாட்சியை கொள்ளையடிக்கிற, மக்கள் அளித்த தீர்ப்பை திருடுகிற பாஜகவின் போக்கை வேடிக்கை பார்க்க முடியாது; ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு திமுக தோளோடு தோளாக துணை நிற்கும் என்று அக்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் முறைகேடு என்பது நிர்வாக குளறுபடி அல்ல.. அது பெரும் சதி. மக்களின் தீர்ப்பை திருடுவதற்காக திட்டமிட்ட சதி.
மக்களாட்சியை திருடுகிற, இந்திய ஜனநாயகத்தைக் கொள்ளையடிக்கிற பாஜகவின் போக்கை வேடிக்கை பார்க்க முடியாது.
இந்திய தேர்தல் ஆணையத்தை பாஜக, தேர்தல் மோசடிக்கான இயந்திரமாக மாற்றி இருக்கிறது.
வாக்கு திருட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ஆதாரங்கள், தேர்தல் ஆணையத்தின் மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது. வாக்கு மோசடிக்கு எதிரான ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு திமுக தோளோடு தோளாக துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.