தமிழக பாஜகவின் பூத் முகவர்களுக்கான பயிலரங்கில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்ற நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மட்டும் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக பாஜகவின் “பூத் வலிமைப்படுத்தும் பயணம்” எனும் தலைப்பில் மாநில பயிலரங்கம், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் SRM பல்கலைகழக வளாகத்தில் இன்று ஜூலை 6-ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் 2600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான பேனரில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் படமும் இடம் பெற்றிருந்து.

இந்த கூட்டத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பூத் கமிட்டி வேலை எப்படி செய்ய வேண்டும் என்பதை அதிமுக, திமுகவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதிமுகவும் திமுகவும் எப்போதும் வாக்கு சேகரிப்பில் பூத் மாஸ்டர்களாக இருக்கின்றனர். அவர்களை தூக்கிச் சாப்பிடும் வகையில் நாமும் பூத் மாஸ்டர்களாக மாற வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், பூத் முகவர்களுக்கு பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்தார். அதில் மிக முக்கியமாக, அண்ணா திமுகவினருடன் களத்தில் இணைந்து இணக்கமாக பணியாற்றுங்க.. எந்த முரண்பாடும் வந்துவிட வேண்டாம். சமூக ஊடகங்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் பதிவிடும் போதும் சுமூக உறவை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

அத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலை பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்த்து கொள்வார்; நமக்கு முதன்மையான இலக்கு 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்தான்.. அதை கவனத்தில் வைத்து பணிபுரிய வேண்டும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, முன்னாள் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பட்டியலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை.
மேலும் இந்த மாநாடு நடைபெற்ற போது சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நான் இப்ப தனி மனிதன்.. யார்கிட்டயும் வேலை செய்யலை.. பேசும்போது பேசுறேன் எனவும் கூறியிருந்தார்.
சென்னையில் பாஜகவின் மிக முக்கியமான பூத் முகவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லையா? என்பது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, சென்னையில் இன்று ஜூன் 6-ந் தேதி நடைபெற்ற முகவர்கள் பயிலரங்கை ஏற்பாடு செய்ய சொன்னதே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான். இன்றைய பயிலரங்கில் அமித்ஷா பங்கேற்பதாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அமித்ஷா இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் டெல்லியில் இருந்து முதலில் அண்ணாமலைக்குதான் கிடைத்தது. அதனால் அண்ணாமலையும் “அமித்ஷா ஜி வராத கூட்டத்துக்கு நாம ஏன் போகனும்?” என புறக்கணித்துவிட்டதாக தெரிவித்தனர்.