தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, 2024-25 நிதியாண்டில் பாஜகவின் நன்கொடைகள் 50%க்கும் மேல் அதிகரித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையம் உட்பட யாரிடமும் தெரிவிக்க தேவை இல்லை என்று தேர்தல் நன்கொடை பத்திரங்கள் சட்டத்தில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், வெளிப்படைத் தன்மை இல்லை என்று கூறி தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட ஒரு ஆண்டுக்குப் பின்னரும் பாஜக அதிக நன்கொடையை பெற்றிருக்கிறது.
அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2024-25 ஆம் ஆண்டிற்கான பாஜகவின் பங்களிப்பு அறிக்கையின்படி, அந்த ஆண்டில் கட்சி ரூ.6,088 கோடியைப் பெற்றது, இது 2023-24 ஆம் ஆண்டில் பெறப்பட்ட ரூ.3,967 கோடியை விட சுமார் 53 சதவீதம் அதிகம்.
காங்கிரஸ் ரூ.522 கோடி வசூலித்திருக்கிறது. இது பாஜக வசூலித்த தொகையை விட 12 மடங்கு அதிகமாகும்.
காங்கிரஸ் மட்டுமல்ல, அதன் ஒட்டுமொத்த கூட்டணியில் உள்ள 12 கட்சிகளின் தேர்தல் நிதியே ஒட்டுமொத்தமாக வெறும் ரூ.1,343 கோடிதான். இந்த தொகையுடன் ஒப்பிட்டால், பாஜக 4.5 சதவிகிதம் அதிக நிதியை வசூலித்திருக்கிறது.
இந்த முறை, தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ.3,744 கோடி பாஜகவால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர தனிப்பட்ட நபர்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து ரூ.2,344 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக ரூ.6,088 கோடி வசூலித்திருக்கிறது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ. 100 கோடி), ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 95 கோடி) மற்றும் வேதாந்தா லிமிடெட் (ரூ. 67 கோடி) ஆகிய நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துள்ளன. மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் லிமிடெட் (ரூ. 65 கோடி), டெரிவ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (ரூ. 53 கோடி), மாடர்ன் ரோட் மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 52 கோடி) மற்றும் லோட்டஸ் ஹோம்டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் (ரூ. 51 கோடி) நிறுவனங்களும் நன்கொடை கொடுத்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
2024-2025ல் திமுக 365 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
