திமுக- காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் எனபாஜக சதிசெய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக – காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என பாஜகவினர் கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறாங்க. அவங்களோட ஒரே நோக்கம் ‘இந்தியா’ கூட்டணியைச் சிதைக்கிறதுதான்.
தமிழகத்துல காங்கிரஸைத் தனியா பிரிச்சுவிட்டு, தலித் மக்களோட வாக்குகளையும் சிறுபான்மையின மக்களோட வாக்குகளையும் பிரிச்சுப் பார்க்கணும்னு ஒரு பெரிய சதித்திட்டம் போட்டு வேலை செய்றாங்க. ஆனா, அவங்க பருப்பு இங்க வேகாது.
தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரைக்கும், போன தேர்தல்ல கொடுத்ததை விட ஒரு சீட் கூட குறையாது. அதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன். காங்கிரஸை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்னு முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் வந்தப்பவே எங்ககிட்ட சொல்லிட்டாரு,
”சீக்கிரம் ஒரு குழுவை அமைச்சுப் பேச்சுவார்த்தையை முடிக்கச் சொல்லியிருக்கோம். இன்னும் ஒரு வாரத்துல எல்லாம் சுமூகமா முடிஞ்சிடும். மதவாத சக்திகளைத் தமிழ்நாட்டுக்குள்ள நுழைய விடாம இருக்குறதுதான் எங்களோட முதல் வேலை,” அப்படின்னு ரொம்பத் தெளிவா முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்காரு. இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
