மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டார்ஜிலிங்கில் உள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
மேலும் டார்ஜிலிங் மாவட்டத்தையும், வடக்கு சிக்கிமை இணைக்கும் சாலைகளும், சிலிகுரி – மிரிக் டார்ஜிலிங்கை இணைக்கும் இரும்புப் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்வு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில், மீட்பப்பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு மற்றும் பாஜக எம்.எல்.ஏ சங்கர் கோஷ் ஆகியோர் இன்று சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் எம்.பி கஜென் முர்மு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். மேலும் அவர் சென்ற கார் கண்ணாடிகள் பொதுமக்களால் உடைக்கப்பட்டது.
முகத்தில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக மேற்கு வங்க மாநில பொறுப்பாளரான அமித் மால்வியா கூறுகையில், “பழங்குடியினத் தலைவரும் வடக்கு மால்டாவிலிருந்து இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவருமான பாஜக எம்.பி. கஜென் முர்மு, பேரழிவை ஏற்படுத்திய மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ ஜல்பைகுரியின் டூர்ஸ் பகுதியில் உள்ள நக்ரகாட்டாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டார்.
மக்களுக்கு உண்மையில் உதவுபவர்கள், பாஜக தலைவர்கள் மற்றும் காரியகர்த்தர்கள், நிவாரணப் பணிகளைச் செய்ததற்காக தாக்கப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கட்டுபாடற்ற காட்டாட்சியை நடத்துகிறது. இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியது” என பாஜக குற்றம் சாட்டினார்.