கடந்த இருபதாண்டுகளாகத் தொடர்ந்து நாயகியாகக் கோலோச்சிவரும் இந்தி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் கங்கனா ரனாவத். ‘கேங்ஸ்டர்’ படத்தில் 2006ஆம் ஆண்டு இவர் அறிமுகமானார். பிறகு ‘வோ லம்ஹே’, ‘லைஃப் இன் எ மெட்ரோ’, ‘பேஷன்’ படங்களின் வழியே முன்னணி நடிகை ஆனவர் தமிழில் ‘தாம்தூம்’ படத்திலும் நடித்தவர். 2009 ஆம் ஆண்டு ‘ஏக் நிரஞ்சன்’ படத்தில் பிரபாஸின் ஜோடியாகத் தோன்றியிருந்தார்.
பிறகு, தொடர்ந்தாற்போலப் பல இந்திப் படங்களில் நடித்தார். அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ’கிரிஷ் 3’, ‘குயின்’, தனு வெட்ஸ் மனு’, ‘சிம்ரன்’, ‘தனு வெட்ஸ் மனு 2’ படங்கள் திகழ்கின்றன.
தமிழில் வெளியான ஜெயலலிதாவின் ‘பயோபிக்’ ஆன ‘தலைவி’யிலும் இவரே நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ‘மண்டி’ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இவர் எம்.பி.ஆகவும் ஆனார். அந்த வகையில் வெற்றிகரமான நடிகை மற்றும் அரசியல்வாதியாக வலம் வருகிறார்.
சமீப ஆண்டுகளாக கங்கனா நடித்த ‘மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’, ‘பங்கா’, ‘தக்கட்’, ‘தேஜாஸ்’, ‘சந்திரமுகி 2’ படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இவர் இயக்கி நடித்த ‘எமர்ஜென்ஸி’ சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், 22 கோடி ரூபாய் வரை தான் வசூலித்ததாம்.
கங்கனா நடிப்பில் தமிழ், இந்தியில் உருவாகிற ‘சைக்காலஜிகல் த்ரில்லர்’ படத்தை ஏ.எல்.விஜய் இயக்கப் போவதாகவும் செய்திகள் வந்தன.
இந்த நிலையில், தற்போது ஏற்கனவே நடித்த படங்களின் அடுத்த பாகங்களில் அவர் நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
’குயின் 2’ படம் வழியே விகாஸ் பாஹ்ல் மற்றும் ‘தனு வெட்ஸ் மனு 3’ வழியே ஆனந்த் எல்.ராய் உடன் அவர் மீண்டும் இணையவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்விரு இயக்குனர்களும் கங்கனாவுக்கென்று ‘தனித்துவமான’ அடையாளத்தைத் திரையுலகில் உருவாக்கியவர்கள். அதனால், அவரது ‘கம்பேக்’கும் இவர்களால் நிகழக்கூடும்..!