திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் பாஜக சார்பில் மோடியின் 75 பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கோ பூஜை நடைபெற்றது.
திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில், பிரதமர் மோடியின் 75ஆவது பிறந்த நாளை (செப்டம்பர் 17) முன்னிட்டு பாஜக நிர்வாகி முரளி சார்பில் தனியார் பள்ளியில் 1008 பசுக்களை கொண்டு கோ பூஜை நடத்தப்பட்டது.
இந்த கோ பூஜையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அவர் ஆளுநரை சந்திக்க வேண்டியிருந்ததால் இந்த பூஜையில் கலந்துகொள்ளவில்லை. பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டன.ர்
பாஜக அழைப்பின் பேரில் கூட்டணி கட்சியான அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கலந்துகொண்டார்.
கோ பூஜையை தொடர்ந்து மோடியின் 75ஆவது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 75 ஏழை எளியோருக்கு இலவசமாக கன்றுடன் பசுக்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பசுக்களை அழைத்து வந்தவர்களுக்கு, தாம்பூல தட்டில் வேட்டி, புடவை, மாலையுடன் 200 ரூபாய் பணமும் வைத்து கொடுக்கப்பட்டது.
கோ பூஜைக்கு பசுக்களை அழைத்து வந்தவர்கள் அவர்களது குழந்தைகளையும் அழைத்து வந்தனர்.
அப்படி அழைத்து வரப்பட்ட குழந்தைகளின் ஒரு சிறுவன் மஞ்சள் நிறத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரும், திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்த டி சர்ட்டை அணிந்திருந்தான்.
அதேசமயம் வெயில் அடிக்காமல் இருக்க தலை மீது பாஜக துண்டினை போட்டு கொண்டு கோ பூஜையில் வழங்கப்பட்ட தாம்பூல தட்டுடன் அமர்ந்திருந்தான்.
கோ பூஜை நடத்துவது பாஜகவாக இருந்தாலும் சிறுவன் டி சர்டில் திமுகவின் இரு தலைவர்கள் புகைப்படம் இருந்ததைப் பார்த்த பாஜகவினர் ஆடையை மாற்றி வர சொன்னார்கள். ஆனால் வீடு அவ்வளவு தூரத்தில் இருக்கிறது. என்னால் போக முடியாது என்று மறுத்து அமர்ந்துள்ளான்.
கையில் தாம்பூல தட்டுடன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு, ‘விட்டால் போதும்’ என்றவகையில் சிறுவன் அமர்ந்திருந்த புகைப்படம் தற்போது வாட்ஸ் அப்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.