ராஜன் குறை
இந்திய மக்களாட்சி மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மக்களாட்சியின் அடிநாதமான வெகுஜன இறையாண்மை என்ற கோட்பாடு, அதாவது ஆட்சியாளர்களை அனைத்து மக்களும் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதால் வெகுஜனங்களே இறையாண்மையின் ஆதாரம் என்ற தத்துவம், சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.
ஒரு புறம் வாக்காளர் பட்டியலின் மலைக்க வைக்கும் குளறுபடிகள் மற்றும் “வோட் சோரி” என்று ராகுல் காந்தி அழைக்கும் சாத்தியமான திருட்டு வேலைகள், மோசடிகள், தகுதியான வாக்காளார்கள் பெரும் எண்ணிக்கையில் நீக்கப்படுவது ஆகியவற்றின் மூலம் தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவெளியில் சரி பார்க்கக் கூடிய கணினித் தரவுகளை, வாக்குப்பதிவு சிசிடிவி காட்சிகளை அது பகிர மறுக்கிறது.
மற்றொருபுறம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை ஒன்றிய அரசில் ஆள்பவர்கள் சுலபத்தில் பறிக்கும் சட்டமொன்றை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. முப்பது நாட்களுக்குமேல் ஆட்சியிலிருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தால்கூட அவர் தானாகவே பதவி இழப்பார் என்கிறது இந்த சட்டம்.
ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை எதிர்கட்சி மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை பி.எம்.எல்.ஏ சட்ட த்தை பயன்படுத்தி வெறும் ஐயத்தின் அடிப்படையில் விசாரணைக் கைதியாக பிணை தராமல் பல மாதங்கள் சிறையில் வைக்கும் நிலையில் இந்த சட்டம் நிறைவேறினால் மக்கள் பிரதிநிதிகளின் பதவி ஒன்றிய அரசின் தயவில்தான் நீடிக்கும் என்ற நிலை ஏற்படும். அப்போது அவர்களுக்கு வாக்களித்த மக்களின் இறையாண்மை அர்த்தமிழந்து போய்விடும். இந்த விபரீதத்தை முழுமையாக உணர நாம் வரலாற்றைத் திரும்பப் பார்க்க வேண்டும்.

இந்தியக் குடியரசின் உருவாக்கம் என்ற புரட்சிகர நிகழ்வு
இந்தியக் குடியரசு எழுபத்தைந்து உன்னதமான ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. ஏன் உன்னதமான ஆண்டுகள்? ஏனெனில் தொழில் மயமாகாத, வறுமையும் கல்லாமையும் மிகுந்த, அளப்பரிய பன்மைத்துவம் கொண்ட இந்திய மக்கள் பரப்பு வெகுஜன இறையாண்மை என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கி, தொடர்ந்து தேர்தல்களில் கட்சிகளுக்கு வாக்களித்து, அதன் மூலம் ஆட்சியாளர்களை மக்கள் நலனை கருத்தில் கொண்டு இயங்க வைத்து கணிசமான பொருளாதார, சமூக வாழ்வியல் முன்னேற்றத்தைக் கண்டு இயங்கி வருகிறது என்பதுதான். இந்த வெற்றியை புரிந்துகொள்ள மக்களாட்சிக் குடியரசு என்ற நவீன வடிவத்தினைக் குறித்து சிந்திக்க வேண்டும்.
இந்தியா ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து விடுதலை அடையும்போது 565 குறுநில மன்னர்களின் மன்னராட்சிப் பிரதேசங்கள் இந்திய நிலப்பரப்பில் இருந்தன. அவை இறையாண்மை கொண்ட அரசுகளாக பிரிட்டிஷ் அரசால் அங்கீகரிக்கப்பட்டிருந்ததால், அவை விரும்பினால் இந்திய ஒன்றியத்திலோ, பாகிஸ்தானுடனோ இணையலாம், அல்லது சுதந்திர நாடாக இயங்கலாம் என்ற வாய்ப்பும் இருந்தது. அந்த அளவு மன்னராட்சி என்பது பரவலான நடைமுறையாக இருந்துவந்தது. மன்னராட்சி என்பது இறையாண்மையின் பழைய வடிவம் என்பதுடன் அது ஒரு மனநிலை; சமூக உளவியல். மன்னரை தெய்வத்தின் அருள் பெற்றவராக க் கருதி வழிபடும் உளவியல் பரவலானது. அவர் எத்தகைய சூது,வாது செய்தோ, அரண்மனைச் சதி செய்தோ அரியணையில் அமர்ந்து முடிசூடினாலும், அவர் கட்டளைக்கு அனைவரும் கீழ் படிய வேண்டும் என்பதுதான் அரச நீதி. அதன் அடிப்படை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு.
ஐரோப்பாவில் அச்சுக்கலை வளர்ச்சியால் பரவிய கல்வி, முதலீட்டிய வளர்ச்சியால் பெருகிய நகரங்கள், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைத் தளர்த்திய பூர்ஷுவா என்ற முதலீட்டிய தொழில் முனைவோரின் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றால் மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, மெல்ல மெல்ல குடியரசு சிந்தனையும், மக்களாட்சிக் கருத்தியலும் தோன்றின. அதன் விளைவாக இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஐக்கிய குடியரசு என்ற மன்னரல்லாத நவீன மக்களாட்சிக் குடியரசு உருவானது. அதற்கான அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டு மக்களே தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் அமைப்பு உருவானது.
இவ்வாறு படிப்ப டியான சமூக மாற்றத்தால், கல்விப் பரவலால், தொழிற்புரட்சியால், நகர்மயமாதலால் அமெரிக்கா-ஐரோப்பாவில் தோன்றிய வெகுஜன இறையாண்மை, அவ்வாறான வளர்ச்சியைப் பெற்றிருக்காத இந்தியாவில் துணிகரமாக 1950-ஆம் அரசியலமைப்புச் சட்ட த்தால் உயிர் பெற்றது. எத்தனையோ சிறிய நாடுகளில் அரசியலமைப்பு சீர்குலைவதும், ராணுவ ஆட்சி ஏற்படுவதும். அதற்கு எதிராக புரட்சி நடப்பதுமாக நிலையற்ற தன்மை நிகழும்போது, இந்தியக் குடியரசு பெருமளவு அரசியலமைப்பு நிலைத்து வேரூன்றுவதை சாத்தியமாக்கியதே நாம் உன்னதமான வரலாறு என சுட்டியது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் அரசியல் வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்திய பயணத்தின் சிறப்புகள் புரியும்.
இறையாண்மை உருமாற்றம்
மக்களாட்சிக் குடியரசில் இறையாண்மை என்ற கருத்தாக்கம் தலைகீழாக்கப்பட்டது. வெகுகாலமாக மன்னர்கள் இறைவனின் பிரதிநிதிகள், அதனால் மன்னரின் இறையாண்மை கேள்விக்கு அப்பாற்பட்ட து எனக் கருதப்பட்டது. அதாவது இறையாண்மை இயற்கைக்கும் அப்பாற்பட்ட அருவமான இறைவன் என்ற மேலிடத்திலிருந்து கீழே இறங்கிச் செயல்பட்டது. மக்களாட்சிக் குடியரசில் இறையாண்மை மக்களிடமே இருப்பதாகக் கருதப்பட்டு கீழிருந்து மேலே சென்றது. பக்தியுள்ளவர்கள் கூட இறைவன் அரசனிடம் கொடுக்காமல், இறையாண்மையை மக்களிடமே கொடுத்துவிட்டதாகக் கருதினார்கள்.
முதலில் இந்த மாற்றத்தை ஆதரித்த முதலீட்டிய சக்திகள், பின்னர் இறையாண்மை முழுமையாக மக்களிடம் சென்றால் உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் முதலீட்டியக் குவிப்பை நிகழ்த்த முடியாது என்று உணர்ந்து தேசியம் என்ற கருத்தியலை உருவாக்கியது. இப்போது அருவமான தேசம் என்ற புனித அடையாளம் இறைவனைப் போல மேலே நிறுத்தப்பட்டு அதிலிருந்தே மக்கள் தங்கள் இறையாண்மையைப் பெறுவதாக மடைமாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் மக்களிடமிருந்து முழுமையாக இறையாண்மையை பறிக்க முடியவில்லை. அதனால் அரச மையவாதம், மக்கள் மையவாதம் இரண்டும் மக்களாட்சியின் அடிப்படை முரணைக் கட்டமைக்கின்றன.
மற்றொருபுறம் அரசியலமைப்பு சட்ட த்தின்படி வடிவமைக்கப்பட்ட குடியரசில் சட்ட த்தின் ஆட்சி என்பதும், மக்களாட்சி என்பதும் இரண்டு முற்றான இறையாண்மை வடிவங்களாக விளங்கின. இவை இரண்டிற்குமான இயங்கியல் சிக்கலானது. சட்ட த்தை மாற்றவே முடியாது என்றால் மக்களாட்சிக்குப் பொருளில்லை. மாறாக ஒவ்வொரு பெரும்பான்மை அரசும் சட்ட த்தை விருப்பம்போல மாற்றினால் சட்டத்தின் ஆட்சி என்பதற்குப் பொருளில்லை. அதனால் சட்ட த்தை மாற்றுவதற்கான நிபந்தனைகளை கடுமையானதாக வைப்பதும். புதிய சட்டங்கள் முறையானவையா என்று விசாரிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்திடம் கொடுப்பதும் ஒரு அதிகார சமநிலைப் பேணலாக வைக்கப்பட்டது.

இந்தியக் குடியரசின் உள்முரண்கள்
இந்தியக் குடியரசின் வரலாற்றில் 1973-ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு மைல் கல்லாகும். அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அமர்வு, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டுமானத்தை (basic structure) நாடாளுமன்றம் நிறைவேற்றும் எந்த சட்டமும் மாற்றக் கூடாது என்று தீர்ப்பளித்தது. அடிப்படைக் கட்டுமானம் என்பது என்ன, அது ஒரு புதிய சட்ட த்தால் பாதிக்கப்படுகிறதா என்பதை ஒவ்வொரு வழக்கிலும் விவாதித்துதான் தீர்மானிக்க முடியும் என்பதும் ஒரு கூடுதல் அம்சம்.
இந்தியக் குடியரசில் மக்கள் தங்களிடம் முற்றாக ஒப்படைக்கப்பட்ட இறையாண்மையை மூன்று தளங்களில் தங்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்கிறார்கள். உள்ளூராட்சி, மாநில அரசு, ஒன்றிய அரசாங்கம் ஆகியவை அவை. இவை ஒவ்வொன்றுமே வெகுஜன இறையாண்மையின் முற்றான வடிவங்கள் என்பதால் அந்தந்த தளங்களின் சுயாட்சி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இறையாண்மை கீழிருந்தே மேலே செல்வதால் உள்ளூர் ஆட்சிக்கு அதிக அதிகாரங்கள், அதற்கடுத்தபடி மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்களும் அதற்கும் அடுத்தே ஒன்றிய அரசாங்கத்தின் அதிகாரங்களும் அமையவேண்டும். ஆனால் குடியரசு உருவான சமயத்தில் அடித்தள மக்கள் போதுமான கல்வியறிவு பெறவில்லை என்பதால், ஒன்றிய அரசாங்கத்திடம் அதிக அதிகாரமும், மாநில அரசுகளிடம் மீதுமுள்ள அதிகாரமும் வழங்கப்பட்டு உள்ளூர் ஆட்சிகளுக்கு சொற்ப அதிகாரங்களே வழங்கப்பட்டன.
தேர்தல்கள் நடக்க நடக்க, மக்களிடையே கல்வியறிவு அதிகரிக்க, பொருளாதார வளர்ச்சியும், நகர்மயமாதலும் அதிகரிக்க மக்களாட்சியின் முக்கியமான களமாக மாநில அரசுகளே உருவெடுத்தன. காரணம் பொதுமன்ற மொழியே மக்களின் அரசியல் தன்னுணர்வைத் தீர்மானித்தது என்பதால் மொழிவாரி மாநிலங்களே மக்களின் மையமான அரசியல் களங்களாக மாறியுள்ளன.
முதலீட்டிய சக்திகள், பாசிச சக்திகள் ஒன்றிய அரசிடம் அதிகாரம் குவிவதை விரும்புகின்றன. மாநிலங்கள் முழுவதும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் முதலீட்டியக் குவிப்பிற்கு ஆதரவான செயல்பாடுகளை சுலபமாக மேற்கொள்ள முடியும் என்பதும், மாநில அரசுகள் அதிக அதிகாரம் பெற்றால் மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதும் நடைமுறை யதார்த்தமாக மாறியுள்ளது. இந்த நிலையில்தான் வெகுஜன இறையாண்மையை பறிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி பறிப்பு சட்டம் அறிமுகப் படுத்தப் படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின் 130-ஆவது திருத்தம்
தேசியத் தலைநகரான டில்லியில் வசிக்கும் ஒன்றரைக்கோடி மக்களுக்கான மாநில அரசில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சிக்கும், ஒன்றிய அரசில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சிக்கும் கடுமையான முரண்கள் அதிகரித்து வந்தன. அந்த நிலையில் சில ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி டில்லி மாநில அரசின் அமைச்சர்கள் அமலாக்கத் துறையால் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப் பட்டார்கள். பி.எம்.எல்.ஏ என்ற சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்ட தால் பிணை வழங்கப்படாமல் பல மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்கள். வழக்கு விசாரணையும் முன்னெடுக்கப் படவில்லை. ஒவ்வொருவரும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறையை கண்டிக்கத் துவங்கியது. இறுதியாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலே கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர் பதவி விலகாமல் சிறையிலிருந்தே அலுவலை கவனிப்பேன் என்று சொன்னார். அப்படி செய்யக் கூடாது என்று சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை என்பதால் பெரியதொரு சிக்கல் ஏற்பட்டது. சிறிது காலம் கழித்து பதவி விலகி அதிஷி மர்லேனாவை முதல்வராக்கினார். இறுதியில் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இன்னமும் விசாரணைக்கும் வரவில்லை, அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இருப்பினும் இந்த கைது நடவடிக்கைகளால் கட்சியின் கட்டுமானம் பாதிக்கப்பட்டதால், அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி கட்சி.
ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில அரசை ஒன்றிய பாஜக அரசு விரோத பாவத்துடன் நட த்தியதும், பல்வேறு அமைச்சர்களையும், இறுதியில் முதலமைச்சரையும் வெறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக பல மாதங்கள், சிலரை ஒராண்டிற்கும் மேலாக சிறையில் வைத்திருந்ததும் ஒன்றிய அரசு -மாநில அரசு உறவினை பேரரசு – சிற்றரசு உறவு போல மாற்றுகிறது. வெகுஜன இறையாண்மையை மன்னர்கால இறையாண்மையாக மாற்றுகிறது.
ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவர் இறையாண்மையின் வடிவமாகிறார். அவர் மீது என்ன குற்றம் சுமத்தினாலும், அவர் ஐந்தாண்டுகாலம் மக்கள் பிரதிநிதிதான். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றால்தான் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும். உண்மையில் பார்த்தால் ஒரு குற்றவாளியையும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. சட்ட த்தின் இறையாண்மை அவரைத் தண்டிக்கலாம்; இருந்தாலும் மக்களின் இறையாண்மை அவர் பிரதிநிதித்துவத்தை ஏற்கலாம். ஏனெனில் சட்டமும், மக்களும் முற்றான இறையாண்மை வடிவங்கள். வெகுஜன இறையாண்மைக்கு இந்த மதிப்பைத் தரவில்லையென்றால் மக்களாட்சி வலுவிழந்துவிடும். காரணம், சகல வல்லமையுள்ள ஒன்றிய அரசு வழக்கை எப்படி வேண்டுமானல் ஜோடித்து ஒருவரைக் குற்றவாளியாக்கலாம். இப்படியே போனால், எதிர்கட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சியைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலை ஒருவாகிவிடும்.
ஒருவர் மக்கள் பிரதிநிதி ஆகிவிட்டால் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் சிறையில் வைக்கப்படக் கூடாது. அப்படியே தவிர்க்க முடியாமல் விசாரணைக் கைதியாக சிறை வைக்கப் பட்டாலும், அவர் பதவியில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். ஏனெனில் மக்கள் வழங்கிய இறையாண்மை அதிகாரத்தை அவர்கள்தான் திரும்பப் பெற முடியும்.
எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மீது போடப்பட்ட அபத்தமான ஒரு மான நஷ்ட வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தடாலடியாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதும், உடனே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட தும் முக்கியமான உதாரணம். அப்பட்டமான இது போன்ற அரசியல் பழிவாங்குதல் பதவி பறிப்புகள் சட்ட த்தின் பேரில் நடத்தப்பட்டால் நாட்டில் மக்களாட்சி தொடர்ந்து நீடிக்காது. மக்களாட்சி இல்லாவிட்டால் பொருளாதார வளர்ச்சி சிதைந்து போய்விடும்.
பாரதீய ஜனதா கட்சி ஒருவேளை அதை விரும்பலாம். ஏனெனில் அந்த கட்சியின் முன்னோடி அமைப்புகள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த குறுநில மன்னர்களிடம் மிகுந்த அணுக்கமும், நட்பும் கொண்டிருந்தன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, குறிப்பாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை அவர்கள் ஏற்கவில்லை. அவர்கள் இலட்சியமெல்லாம் மன்னராட்சி போல அகண்ட பாரத இந்துத்துவ பேர ரசை உருவாக்குவதுதான் எனலாம். அதே சமயம் பொருளாதார வல்லரசாகவும் விரும்பும். பாஜக தன்னுடைய முரண்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும். மக்களாட்சியில் ஈடுபாடு கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து வெகுஜன இறையாண்மையைக் காக்க வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com