தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று (டிசம்பர் 20) நெல்லை சென்றார்.
இன்று மாலை திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டார். இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்து, அங்கு வந்திருந்த குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோருக்கு கேக் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விழாவில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கிறிஸ்துமஸ் என்பது வெறும் ஒரு மத விழா மட்டுமல்ல, அது அன்பு, ஈகை மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றும் விழா. சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.” என்று குறிப்பிட்டார்.
“எந்த ஒரு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்தி அசத்துபவர் இனிகோ இருதயராஜ். இன்று திருநெல்வேலியை நோக்கி தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு இந்த விழாவை நடத்தி கொண்டிருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக சமத்துவ விழாவாக கிறிதுமஸ் விழாவை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் இந்த அமைப்பின் பெயரை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் என்று வைத்திருக்கிறார். அவரது நல்லெண்ணத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்” என பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் அவர், “திராவிட மாடல் அரசு எப்போதும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக் காவலனாக இருக்கும். உரிமைகள் மறுக்கப்படும்போது குரல் கொடுப்போம், துன்பங்கள் வரும்போது துணை நிற்போம்” என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்படும்.
தமிழகத்தின் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சியில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு அளப்பரியது. விளிம்பு நிலை மக்களும் கல்வி பெற அவர்கள் ஆற்றிய தொண்டுதான் இன்றைய தமிழகத்தின் சமூக நீதி வளர்ச்சிக்கு அடிப்படை” என்றார்.
கிறிஸ்தவப் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான உதவித் திட்டங்கள், தேவாலயங்களைப் புதுப்பிப்பதற்கான நிதி ஒதுக்கீடு, கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவியை உயர்த்தியது என கிறிஸ்துவ சமூதாயத்துக்கு திமுக அரசில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பேசிய அவர், “இனிகோ இருதயராஜ் கோரிக்கையை ஏற்று விருதுநகர், ராமதாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கல்லறை தோட்டங்கள் அமைக்க அரசு இடங்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. மேலும் 13 மாவட்டங்களில் கல்லறை தோட்டங்களில் சுற்றுச்சுவர் அமைக்க 13 கோடி ரூபாயை விடுவித்திருக்கிறோம்” என்றார்.

மதத்தின் பெயரால் ஒருவர் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் எப்படி அமைதியை சீர்குலைக்கலாம், ஒன்றாக இருக்கும் மக்களை எப்படி எதிரிகளாக பிரித்து வைக்கலாம் என்று பலர் யோசிக்கிறார்கள். ஆன்மீகத்தின் பெயரால் சில அமைப்புகளை அழைத்துச் செல்ல நினைக்கூடிய வழி, வன்முறைக்கான பாதை என்பதை தமிழ்நாடு உணர்ந்திருக்கிறது.
மதச்சார்பின்மை என்ற சொல்லை கேட்டாலே மத்திய பாஜக அரசுக்கு வேப்பங்காய் போல கசக்கிறது. அதை அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க துடிக்கிறார்கள். நாட்டின் பன்முகத்தன்மையை உடைத்து ஒரே மதம்,ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே கட்சி என எதேச்சதிகாரத்தை திணிக்க முயல்கிறார்கள். எப்படிப்பட்ட ஆபத்தையும், பாஜகவின் நாசக்கார வேலையையும் முறியடிக்கிற தன்மை தமிழகத்துக்கும் திமுகவுக்கும் இருக்கிறது. இதுதான் நம்ம ஹிஸ்டரி.
இப்போது கூட எஸ்.ஐ.ஆர் பணியை மேற்கொண்டார்கள். இதனால் என்ன பிரச்சினை வந்திருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம்.
நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் கவலை படாதீர்கள். திமுகவினர் உங்கள் வீடு தேடி வருவார்கள். உங்களை பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வேலைகளை அவர்கள் செய்வார்கள்” என்று கூறினார்.
