பாஜகவின் பூத் முகவர்களில் 50% போலியாக சேர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை வந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷிடம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் தந்துள்ளார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
பாஜக பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், புதுச்சேரி பயணத்தை முடித்துவிட்டு சென்னை வந்தார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலேயே இரவு தங்கினார் பிஎல் சந்தோஷ்.
இதனையடுத்து நேற்று ஆகஸ்ட் 10-ந் தேதி தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் 14 பேரை கொண்ட மையக் குழு கூட்டத்தை நடத்தி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார் பிஎல் சந்தோஷ். இந்தக் கூட்டத்தில், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற ஓபிஎஸ்ஸை கூட்டணியில் தக்க வைத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பிஎல் சந்தோஷிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பூத் முகவர்கள் மாநாடு பற்றி விவரித்தார். இந்த மாநாட்டுக்காக தென் மாவட்டங்களின் 30 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற ஆலோசனை கூட்ட விவரங்களையும் பகிர்ந்தார். அப்போது, பூத் முகவர்கள் பட்டியலை சரிபார்க்கும் போது 50% பேர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.. அனைத்துமே அண்ணாமலை, பாஜக தலைவராக இருந்த போது தயாரிக்கப்பட்ட முகவர்கள் பட்டியல். இதை சரி செய்வதற்கே அதிக நேரமாகிறது என புகார் வாசித்தாராம்.
இதை அமைதியாக கேட்டுக் கொண்ட பிஎல் சந்தோஷ் ரியாக்ஷன் எதுவும் காட்டாமல், அப்படியிருந்தா அந்த பட்டியலை முதலில் சரி செய்துவிட்டு சரியான முகவர் பட்டியலை தயார் செய்திடுங்க என்று மட்டும் பட்டும் படாமல் சொல்லிவிட்டாராம். தமிழக பாஜக வட்டாரங்களில் இந்த போலி முகவர்கள் விவகாரம்தான் பேசுபொருளாக இருக்கிறது என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.