ராஜன் குறை
பாரதீய ஜனதா கட்சியும், அதன் இணை அமைப்புகளான பல்வேறு சங்க பரிவார அமைப்புகளும் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமன்று ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். தமிழ்நாட்டு அரசு அதனை உறுதிபடத் தடுத்து நிறுத்தியது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பல கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் சென்று கைதானார். அப்போதும் திருப்பரங்குன்றத்திலோ, மதுரையிலோ, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலோ எந்த விதமான சலசலப்பும் இல்லை. மறுநாள் திருப்பரங்குன்றத்தில் கடையடைப்பு நடத்த பாஜக அழைப்பு விடுக்கிறது. வர்த்தகர்கள் யாரும் அதில் பங்கேற்கவில்லை.

திருப்பரங்குன்ற மலையில் பல குன்றுகள் அதாவது பாறை உச்சிகள் உள்ளன. அடிவாரத்தில் ஒரு சிறிய பாறை உச்சியில் முருகன் கோயில் இருக்கிறது. அதன் குடவரைப் பகுதிக்கு மேல் பாறையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் இருக்கிறது. வேறோரு பாறையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இடையில் நெல்லித்தோப்பு என்ற சமதளப்பகுதி உள்ளது. இந்த பகுதியிலிருந்து எழும் இன்னொரு உயரமான பாறை உச்சியில் சிக்கந்தர் தர்க்கா உள்ளது. இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இறந்துபோன ஒரு புனிதரின் அடக்கத் தலம் என்று கருதப்படுகிறது. அதாவது 800 ஆண்டுகள் வழிபடப்பட்டுவரும் தலம்.
இந்த விரிந்த மலைப்பகுதியில் மிகவும் பிரசித்தமான முருகன் கோயிலுக்கு செல்பவர்கள் யாரும் அந்த மலையின் பிற பகுதிகளில் உள்ளவற்றைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். அதனால் சிக்கந்தர் தர்க்கா குறித்தெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அது மலையின் வேறொரு பகுதியில் இருப்பதால் முருகன் கோயிலுக்கோ, அங்கு வழிபடச் செல்பவர்களுக்கோ எந்த இடையூறும் இருந்ததாக கடந்த நூறாண்டு காலத்தில் முருகனை வழிபடச் சென்றவர்கள் குறிப்பிட்டதில்லை. ஏனெனில் அவர்களுக்கு தர்க்காவின் இருப்பு குறித்து தெரிய வாய்ப்பேயில்லாமல் இருந்திருக்கும்.

வட நாட்டு மதவாத அரசியல் அமைப்புகள் கண்ணை இந்த தர்க்கா உறுத்துகிறது. முருகன் கோயில் உள்ள மலையில் தர்க்கா இருப்பதை வைத்து பிரச்சினை செய்ய ஆசைப்படுகிறார்கள். ஆனால் மதுரையிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி வசிக்கும் முஸ்லீம்கள் பெரும்பாலோர் மதம் மாறிய தமிழர்கள். உதாரணமாக மதுரையை சிறிது காலம் ஆண்டு, ஆங்கிலேயர்களுடன் போரிட்டு அவர்களால் தூக்கிலிடப்பட்ட கான்சாகிப் யூசுப் கான் (1725-1764), பிறப்பில் மருதநாயகமாக இருந்து மதம் மாறியவர். கமலஹாசன் அவர் வரலாற்றைத் தழுவி ஒரு படம் எடுக்க முற்பட்டதும், அந்த முயற்சி பாதியில் நின்றுபோனதும் தமிழ்நாடு நன் கு அறிந்த செய்திகள்தான்.
தமிழ்நாட்டின் நூறாண்டுகால நவீன அரசியல் வரலாற்றிலும், பொதுமன்றத்திலும் திராவிட-தமிழர் என்ற தன்னுணர்வு உருவானபோது அது முஸ்லீம்களை விலக்கியதாக இல்லை. வட நாட்டில் இந்துஸ்தானி மொழியை சமஸ்கிருதமயமான இந்தியாகவும், உருதுவாகவும் பிரித்து முஸ்லீம்களை வேற்றுமைப்படுத்தியதுபோல தமிழ் பொதுமன்றத்தில் நிகழவில்லை என்பதால் இங்கு இவ்விதமான ஒரு முஸ்லீம் வழிபாட்டுத்தலம், சிக்கந்தர் தர்க்கா, மலையின் மற்றொரு பகுதியில் இருப்பதை பிரச்சினையாக முருகனை வழிபடும் இந்துக்கள் கருதுவதில்லை. அதற்கான அவசியமும் அறவே எழவில்லை.
பிரச்சினை என்னவென்றால் பாஜக-விற்குத் தெரிந்த ஒரே அரசியல் மதப் பிரிவினைவாத, மதக்கலவர அரசியல்தான். முஸ்லீம்களை எதிரிகளாக க் காட்டி இந்துக்களை பெரும்பான்மையாக ஒருங்கிணைத்து பாசிச அரசியலை முன்னெடுப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே சூத்திரம், தந்திரம், அரசியல் தத்துவம் எல்லாம். இது ஏன் இப்படி என்பதை சற்றே நாம் வரலாற்றில் பின்னகர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.
எங்கேயிருந்து தோன்றியது இந்து மதவாத அரசியல்?
சத்திரபதி சிவாஜி உருவாக்கிய மராத்திய சாம்ராஜ்யம் அவருடைய பேரன் ராஜாராம் காலத்திற்குப் பிறகு பார்ப்பனர்களான பேஷ்வாக்களின் ஆட்சியின் கீழ் வந்தது. நூறாண்டுகாலம் 1713 முதல் 1818 வரை பேஷ்வாக்கள் தலைமையில் மராத்திய பேரரசு இந்தியாவின் கடைசி பேரரசாக இருந்தது. ஒளரங்கசீபிற்குப் பிறகு மொகலாயப் பேர ரசு பலவீனமடைந்தபோது மராத்திய பேரரசு இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பரவியது. தர்ம சாஸ்திரங்கள் பரவலாக்கப்பட்டு வர்ண, ஜாதி அமைப்பு கடுமையாகக் கடைபிடிக்கப்பிட்ட து இந்த ஆட்சியின் முக்கிய அம்சம் எனலாம்.
பல உள்நாட்டுப் பூசல்கள், பேஷ்வா குடும்பங்களுக்குள் அரண்மனைச் சதிகள், மூன்றாம் பானிபட் போரில் 1761-ஆம் ஆண்டு ஏற்பட்ட தோல்வி, ஆங்கிலேயர்களின் கிழக்கந்திய கம்பெனியின் வளர்ச்சி ஆகிய பல காரணங்களால் இந்த ஆட்சி முடிவுக்கு வந்தாலும், மராத்திய பார்ப்பன சமூகங்களில் இந்த ஆட்சியின் தொடர்ச்சிக்கான ஏக்கம் இருந்தது.
சாவர்க்கர், மூஞ்சே, ஹெட்கவார், கோல்வால்கர் என இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்கள் அனைவரும் மராத்திய பார்ப்பனர்களாக இருந்ததை இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள முடியும். ஒரு இந்து பேரரசு அல்லது வல்லரசுக் கனவும், வர்ண தர்ம மீட்புவாதமும் கலந்த கலவையாகவே இந்துத்துவத்தைப் பார்க்க முடியும். சாவர்க்கர் நாத்திகர், ஜாதி ஏற்றத்தாழ்வை ஏற்காத நவீனர் என்றாலும், பொதுவாக பார்ப்பனீய மீட்பு வாதம், புனித வாதம் ஆகியவை இந்த அமைப்புகளில் பரவலாக ஊடுருவி இருந்தன.
சாவர்க்கரின் இந்துத்துவ கருத்தியல் இந்தியாவை இந்துக்களின் புனித பூமி என்று கருதுகிறது. இந்திய எல்லைகளுக்கு வெளியே புனித த் தலங்களைக் கொண்ட முஸ்லீம்களும், கிறிஸ்துவர்கள் முழுமையான இந்தியக் குடிமக்களாக இருக்க முடியாது என்ற கருத்தினைக் கொண்டது இந்துத்துவம்.
இந்த மதவாத நோக்கு பாசிசமாக மாறுவது எப்படியென்றால் இது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அரசியல் உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடுவதற்கு முக்கியத்துவம் அளிக்காது. அதே போல, முதலீட்டியம் உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவதையும் ஏற்காது. கம்யூனிஸ்டுகளை மிக மோசமான எதிரிகளாகவே ஹிட்லர், முசோலினி ஆகியோர் கருதினர். பாஜக-வும் தங்களை விமர்சிப்பவர்களை “அர்பன்-நக்ஸல்” என்று கூறுவதையும், கம்யூனிஸ்டுகளை கடுமையாக எதிர்ப்பதையும் காணலாம்.

இந்த பின்னணியில்தான் மண்டல் கமிஷனுக்குப் பிறகு உருவான பிற்படுத்தப்பட்டோர் அரசியல் எழுச்சிக்கு எதிர்வினையாக அயோத்தி ராம ஜென்ம பூமி பிரச்சினையை கையிலெடுத்து, பல மதக்கலவரங்களுக்குப் பிறகு வட நாட்டில் பல மாநிலங்களில் செல்வாக்குப் பெற்று ஆட்சிக்கு வந்தது பாஜக. ஆனால் பஞ்சாப், வங்காளம், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் அவர்களால் அந்த மதவாத அரசியல் கணக்கினால் அரசியல் ஆதரவை திரட்ட முடியவில்லை. ஆனாலும் அவர்களுக்கு அது மட்டும்தான் தெரியும் என்பதால் திருப்பரங்குன்றத்தை இப்போது பிரச்சினையாக்க முயல்கிறார்கள்.
பிரச்சினைதான் என்ன?
திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலும், தர்க்காவும் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தர்க்காவை எடுத்துக் கட்டியுள்ளார்கள். அதிலிருந்து கோயில் நிர்வாகத்திற்கும், தர்க்கா நிர்வாகத்திற்கும் மலையின் எந்தப் பகுதிகள் சொந்தம் என்பது குறித்து பல வழக்குகள் நிகழ்ந்துள்ளன. இதில் லண்டன் பிரிவியூ கவின்சில் தர்க்காவிற்கு உரிமையுள்ள பகுதிகள் என நெல்லித்தோப்பு பகுதி, அதிலிருந்து மேலேறிச் செல்லும் படிகள், தர்க்கா உள்ள இடம் ஆகியவற்றை 1920-ஆம் ஆண்டு வரையறை செய்துள்ளது.
தர்க்காவிற்குச் செல்லும் படிகட்டுகள் அமைந்துள்ள பாறையின் மற்றொரு முனையில் ஒரு கல் தூண் உள்ளது. தர்க்காவிற்குச் செல்லும் படிகட்டுகளில் சற்று தூரம் ஏறித்தான் இந்த பாறையில் உள்ள தூணுக்குச் செல்ல முடியும். இந்த தூணை கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தூண் என்று மதவாத அமைப்புகள் கருதுகின்றன. அதனை தீபத்தூண் என்பதை ஏற்றுத்தான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பிரச்சினை அது தீபத்தூண் அல்ல என்பதுடன் அவ்வாறு அது பயன்பட்ட தற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான்.

மாறாக இந்தத் தூண் ஆங்கிலேயர்கள் நிலவரைபடங்களை தயாரிக்க நிலங்களை அளவிடும் பொருட்டு நட்டுவைத்த தூண் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆங்கிலேய அதிகாரி வில்லியம் லாம்ப்டன் (1753-1823) என்பவரால் 1802-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட Great Trigonometrical Survey என்ற பிரம்மாண்டமான வரைபட த்திட்டம் பல பத்தாண்டுகள் தொடர்ந்தது. அவருக்குப் பின் அதனைத் தொடர்ந்த ஜியார்ஜ் எவரெஸ்ட் (1790-1866) என்ற அதிகாரியின் பெயரைத்தான் இமயமலைச் சிகரத்திற்கு பின்னாளில் அவரை அடியொற்றி பணியைத் தொடர்ந்த ராதாநாத் சிக்தர் என்ற இந்தியர் வைத்தார்.

இந்த முக்கோணவியல் என்ற டிரிகினாமெட்ரி கணக்குகளை பள்ளியில் பலரும் பயின்றிருப்பார்கள். முக்கோணத்தின் இரண்டு பக்கங்களின் அளவுகளும் கோணமும் தெரிந்தால் மூன்றாவது பக்கத்தின் அளவை அறியலாம் என்பன போன்ற கணக்குகள் அவை.

இந்த ஏற்றக்கோண கணக்கீடுகள் மூலம் நிலத்தை அளந்து வரைபடம் தயாரிப்பது மட்டுமன்றி, பூமியின் வடிவம் முற்றிலும் கோளமானதா அல்லது நீள் கோளமானதா என்பதையும் அறிய விரும்பினார் லாம்ப்டன். அதற்கு உதவிய முக்கியமான கருவிதான் தியோடலைட் என்ற கருவியாகும். அதனால் அதற்கு Great Arc Meridional Survey என்றும் பெயர்.

தியோடலைட் கருவியுடன் தொலைநோக்கி பொறுத்தப்பட்டிருக்கும். இதனை குன்றுகளின், பாறைகளின் உச்சியில் நடும் கல் தூண்களை நிலக்குறிகளாக பயன்படுத்தி தூரங்களை முக்கோணவியல் கணிதத் துணையுடன் அளந்து துல்லியமான அளவைகள் மூலம் வரைபடம் தயாரிப்பார்கள். இந்த கருவிகளை பயன்படுத்தும் பொருட்டு பல கல் தூண்களை குன்றுகளின் மேல் நட்டார்கள் என்று அறியமுடிகிறது.
திருப்பரங்குன்ற மலைமேல் இத்தூண்கள் நிறுவப்பட்ட தற்கான தரவுகளும் உள்ளன. அதில் தர்க்கா உள்ள பாறையில் நடப்பட்டதால் சிக்கந்தர் மலை என்றே குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் எந்த அட்சரேகை, தீர்க்கரேகையில் நடப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தீபத்தூண் என்பதற்கான ஆதாரமாக எந்தக் கல்வெட்டும் இல்லை என்பதுடன், அது நில அளவைக் கல்தூண் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. மேலும் தூணின் அமைப்பும் அதில் விளக்கேற்றும் பொருட்டு நிறுவப்பட்டதாக தோன்றவில்லை. அத்தனை உயரத்தில் காற்றில் அணையாமல் தீபம் எரிய வேண்டும் என்றால் பெரியதொரு எண்ணைக் கொப்பரையை அதன் மேல் ஏற்ற வேண்டும்.

மாறாக உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகேயுள்ள தூண் தீபத்தூண் என்பதற்கான ஆதாரங்கள் நாயக்கர் கால கல்வெட்டில் காணப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள சின்னங்கள், சிற்பங்கள் அதில் காணப்படுகின்றன. முருகன் கோயிலுக்கு நேர் மேலே அமைந்துள்ளது. அதனால், நாயக்கர் காலத்திலிருந்தே அங்கேதான் தீபம் ஏற்றியிருப்பார்கள் என்று கருத முடிகிறது.
திடீர் வழக்கும் தீர்ப்பும்
ஏற்கனவே 2014 ஆம் ஆண்டும், 2017-ஆம் ஆண்டும் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் இந்து முன்னணியினர் தர்க்காவிற்கு அருகிலுள்ள நில அளவைத் தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்று கூறியபோது உயர்நீதிமன்றம் இப்போது இருக்கும் நடைமுறையை மாற்ற அவசியம் இருப்பதாகத் தோன்றவில்லை என்று கூறிவிட்டது.
கோயில் நிர்வாகமோ, அங்கு பணியாற்றும் ராஜா பட்டர் உள்ளிட்டவர்களோ தர்க்காவிற்கு அருகிலுள்ள நில அளவைத் தூணில் ஏற்ற வேண்டும் என்று கருதவில்லை. அவர்கள் உச்சிபிள்ளையார் கோயில் தூண்தான் ஆகம விதிப்படி முறையானது, பாரம்பர்ய நடைமுறை என்று கருதுகிறார்கள்.

இந்த நிலையில்தான் ராம.ரவிகுமார் என்ற இந்து முன்னணி பிரிவொன்றைச் சேர்ந்தவர் கடந்த மாதம் நவம்பர் 3-ஆம் தேதி ரிட் பெட்டிஷன் ஒன்றை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் போடுகிறார். அதனை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரே நேரில் சென்று மலையில் ஏறிப்பார்த்துவிட்டு, நில அளவைத்தூணை தீபத்தூண் என்று கணித்து, அது தர்காவிலிருந்து 15 மீட்டருக்கு அப்பால் இருப்பதால் அது தர்க்கா நிலமல்ல என்றும், பண்டைய நடைமுறையை மீண்டும் பின்பற்றக் கோர பக்தர்களுக்கு உரிமை இருக்கிறதென்றும் கூறி நில அளவைத் தூணில் தீபமேற்ற வேண்டும் என அதிரடித் தீர்ப்பை டிசம்பர் 1-ஆம் தேதி தந்துள்ளார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் மலை உச்சியிலுள்ள கல்தூண் என்றுதான் கூறப்பட்டுள்ளது என்ற நீதிபதி, இந்த நில அளவைக் கல் துல்லியமாகச் சொன்னால் மலையுச்சியில் இல்லாததால் முந்தைய தீர்ப்பு தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும் விநோதமான வாதத்தை வைத்துள்ளார். அப்படியானால் 2017-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மலையுச்சி தூண் எது என்று அவர் கூற வேண்டும் அல்லவா? அப்படி எதுவும் அவர் விளக்கவில்லை. பழைய வழக்காடிகளைக் கேட்கவும் இல்லை.
அது மட்டுமல்ல. தர்க்காவிற்கு ஐம்பது மீட்டர் தூரத்திலுள்ள இந்த கல்லில் தீபம் ஏற்றுவது முருகன் கோயில் நிர்வாகம் அந்த நிலத்தின் மீது தனக்குள்ள உரிமையை நிலைநாட்டும், தர்க்கா அந்த நிலத்தை ஆக்கிரமிக்காமல் தடுக்கும் என்றெல்லாம் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அந்தத் தூணுக்கு தர்க்காவிற்குச் சொந்தமான படிகட்டுகளில் ஏறித்தான் செல்லவேண்டும் என்பதை அவர் கூறினாலும், சில படிகட்டுகளில் ஏறுவதால் தவறில்லை என்றும் கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை புறக்கணிக்கலாமா?
ஏற்கனவே இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை சொத்தைக் காரணங்களால் மாற்றி, தனி நீதிபதி ஒரே மாதத்தில் வழங்கிய அதிரடித் தீர்ப்பை அரசு அமல்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி. அரசுக்கு மேல் முறையீடு செய்ய அவகாசம் உள்ளது என்பதால் கார்த்திகை தீபத்தன்று தீர்ப்பை அமல்படுத்த அரசு மறுத்துவிட்டது.
வெகுண்டெழுந்த நீதிபதி மத்திய அரசின் நிறுவன பாதுகாப்புக்காக உள்ள CISF என்ற காவலர் படையை ராம ரவிகுமாருக்கு துணையாக அனுப்பி மலைமேல் சென்று தீபம் ஏற்றச் சொல்லியுள்ளார். இப்படி ஒரு நீதிபதி தன்னுடைய தீர்ப்பை தானே அமல்படுத்துவது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டம் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் தலையிடுவதாகும். எதுவானாலும் நீதிமன்றம் உத்திரவிடத்தான் முடியுமே தவிர தானே அமலாக்கம் செய்ய முடியாது.
உச்சநீதிமன்றம் சபரிமலை கோயிலுக்கு மாதவிலக்கு பருவப் பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்தது. இந்து அமைப்புகள் அதை நடைமுறைப் படுத்துவதை தடுக்கின்றன. உச்சநீதிமன்றம் CISF வீரர்களை அனுப்பி பெண்களை கூட்டிப் போகச்சொன்னால் ஒன்றிய அரசு வாளாவிருக்குமா?
தமிழகமெங்கும் கார்த்திகை தீபம் திருவண்ணாமலையிலும், அனைத்து திருக்கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் அது பாரம்பரிய வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தூணில் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் ஏற்றக்கூடாது, நில அளவைத் தூணில்தான் ஏற்ற வேண்டும் என்று மதவாத சக்திகள் பிடிவாதம் பிடிப்பது நகைப்பிற்குரியது.
சமத்துவ தீபம்
உயர்நீதிமன்றத்தின் முரண்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கின் விவரங்களை படித்தால் யாருமே மிகத் தெளிவாக இது தேவையில்லாத பிரச்சினை என்பதை தெளிவாக உணரலாம்.
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் உறுதியான நிலைபாட்டை எடுத்ததுடன், மதுரை மக்கள், தமிழ்நாட்டு மக்கள் பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றையே எதிர்நோக்கியுள்ளார்கள் என்பதையும், தமிழ்நாடு அரசும் அதில் முழுமூச்சுடன் செயல்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்ற மதவாதக் கலவரங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைத்தால் அது நடக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும் மக்கள் வாழ்வில் ஒளிர வேண்டிய தீபம் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம்தான் என்பதையும் அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன், சுயமரியாதை, சமத்துவத்துடன் வாழ்வதுதான் உண்மையான ஒளி பொருந்திய வாழ்வு. இதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
பாஜக-விற்கு மதக்கலவர அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாததால் எந்த பிரச்சினையை தூண்டிவிட்டு குளிர்காயலாம் என்று தவிக்கிறார்கள். ஒரு மாற்றத்திற்கு அவர்களும் வளர்ச்சி அரசியல் செய்ய முன்வரவேண்டும். மதுரைக்கு மெட்ரோ ரயில் அனுமதி பெற போராட வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
