ஓபிஎஸுக்கு பாஜக தூது?!

Published On:

| By vanangamudi

BJP attempt to meet O Panneerselvam

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விலகிய நிலையில், அவரை சந்திக்க பாஜக தரப்பிலிருந்து தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எனத் துவங்கி பாஜக கூட்டணியில் இணைந்து செயல்பட்டார். 

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த ஜூலை இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவரை சந்திக்க நேரம் கேட்டு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மூலம் ஓபிஎஸ் முயற்சி செய்தார். 

ஆனால் அவரது மெசேஜுக்கும், அழைப்புக்கும் நயினார் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை. 

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த ஓ. பன்னீர்செல்வம், பாஜக கூட்டணி உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். 

அன்றைய தினமே காலையில் முதல்வர் ஸ்டாலினை நடைப்பயிற்சியின் போது சந்தித்த ஓ பன்னீர்செல்வம், கூட்டணி முடிவு அறிவித்த பிறகு மாலையிலும் முதல்வர் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்தார். 

ADVERTISEMENT

பன்னீர்செல்வத்தின் இந்த நகர்வு தமிழக அரசியலில் விவாத பொருளானது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், ‘பிரதமரை சந்திக்க என்னிடம் கேட்டிருந்தால் நான் நேரம் ஒதுக்கி கொடுத்திருப்பேன்’ என்று பேட்டி அளித்திருந்தார். 

இதற்கு கடுமையாக பதிலளித்த ஓ பன்னீர்செல்வம், “குறுஞ்செய்தி வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் நான் பலமுறை நயினார் நாகேந்திரனை தொடர்பு கொண்டபோதும் எனக்கு அவர் பதிலளிக்கவில்லை. நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்” என்று கூறி மெசேஜ் அனுப்பிய ஆதாரத்தை வெளியிட்டார். 

இந்தசூழலில் ஓபிஎஸுக்கு பாஜக மீண்டும் தூதுவிட்டு வருகிறது.

இதுதொடர்பாக கமலாலயம் வட்டாரத்தில் விசாரித்தபோது, “பாஜக முன்னாள் மாநில தலைவர்களில் ஒருவர், ஓபிஎஸுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அந்த அழைப்பை ஓபிஎஸ்ஸின் பி.ஏ. எடுத்தார். ‘பன்னீர் செல்வத்திடம் பேச வேண்டும்’ என்று சொன்னதும் அவர் ஓபிஎஸ்ஸிடம் போனை கொடுத்தார்.

அப்போது ஓபிஎஸ்ஸிடம் நலம் விசாரித்த பாஜக முன்னாள் தலைவர், ‘நாளை காலை 9 மணி முதல் 12 மணி வரை கமலாலயத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கலந்துகொள்கிறார். இதற்காக தமிழ்நாடு வரும் அவர் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகிறார்.

அவர் நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன்போ அல்லது பின்போ உங்களை சந்திக்க வேண்டுமென விரும்புகிறார். நீங்கள் எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள்” என்று கேட்டார்.

இதற்கு ஓபிஎஸ், ‘பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதை பகிரங்கமாக அறிவித்துவிட்டேன். இந்த நேரத்தில் நான் வந்து சந்திப்பது நன்றாக இருக்காது. இதுதொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு சொல்கிறேன்’ என்று லைனை துண்டித்துவிட்டார்” என்கிறார்கள்.

எனினும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மூலம் ஓபிஎஸை சந்திக்க தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறார் பாஜக பிரமுகர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share