”நான் தொழிலும் செய்வேன், அரசியலும் செய்வேன், விவசாயமும் செய்வேன்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது விவசாயம் மற்றும் பிஸினஸில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் பல ஆயிர கோடி ரூபாய் மதிப்பில் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீடும் கோடி கணக்கில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் கோவையில் இன்று (நவம்பர் 13) செய்தியாளார்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், கர்நாடக மாநிலத்தில் நீங்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்துவதாக சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் வருகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ‘இதில் என்ன தவறு… என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் என்ன மண்ணை சாப்பிடுவதா. நான் பிசினஸ் செய்கிறேன். யாரையாவது அடித்து பிடுங்குகிறேனா… மிரட்டுகிறேனா… உங்களது பணத்தை வாங்கிக் கொண்டேனா… என்னுடைய தொழில் நான் செய்கிறேன். விவசாயம் செய்கிறேன். என்னுடைய அரசியலை நான் செய்கிறேன். இதில் தவறு என எதை நீங்கள் பார்க்கிறீர்கள்.
நான் எங்கிருந்து சாப்பிடுவேன். என் குழந்தைகளுக்கு எப்படி பீஸ் கட்டுவேன். எதை செய்தாலும் நியாயமான மூறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை எந்த தொழிலும் செய்ய வேண்டாம் என்று கையை கட்டிப்போட்டுவிட்டு உட்கார வைத்தீர்கள் என்றால் நான் எங்கிருந்து சாப்பிடுவேன். என் காருக்கு எப்படி டீசல் போட முடியும். எப்படி அரசியல் செய்ய முடியும்.
எல்லா வேலையையும் நான் செய்வேன். அதில் தவறு இருந்தால் நீங்கள் சொல்லுங்கள். இந்த கம்பெனியை ஆரம்பித்திருக்கிறீர்கள், இதில் இந்த தவறு இருக்கிறது… வருமான வரி கட்டவில்லை… ஜிஎஸ்டி கட்டவில்லை… இப்படி எல்லாம் தவறு இருந்தால் சொல்லுங்கள்.
என்னை எந்த தொழிலும் செய்யக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது. கெமிக்கல் இண்டஸ்ட்ரி வைத்து எந்த மீனையாவது சாகடித்தேனா. தண்ணீரை மாசுப்படுத்தினேனா.
எந்த தொழிலையும் தொடங்க எனக்கு உரிமை இருக்கிறது. இன்று கட்சியில் மாநில தலைவராக இல்லாதபோது, ஓடுவதற்கு எனக்கு நேரமிருக்கிறது. என்னுடைய வேலையை செய்வதற்கு, பொருள் ஈட்டுவதற்கு, விவசாயம் செய்வதற்கு நேரமிருக்கிறது.
என்னுடைய நேரம், என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள் பதில் சொல்கிறேன். நியாயமான முறையில் நான் பொருள் ஈட்டி, நியாயமான முறையில் நான் அரசியல் செய்ய வேண்டும். அதைவைத்து என்னுடைய குடும்பம் நியாயமான முறையில் வாழ வைக்க வேண்டும்.
எதுவுமே செய்யக் கூடாது என்றால் எப்படி? நான் உப்பு போட்டு சாப்பிடுகிறவன். என்னுடைய எல்லா தொழிலும் தர்மம் இருக்கிறது. தொழிலே செய்யக்கூடாது என்றால் என்ன நியாயம் இருக்கிறது. நான் என்ன சாராய கம்பெனியா நடத்துகிறேன்.
நான் தொழில் செய்தால்தானே சாப்பிடமுடியும். இப்போது விமானத்தை பிடித்து கோவா போக வேண்டும். கோவா, லட்சத்தீவு, கேரள மாநிலத்தின் எஸ்.ஐ.ஆருக்கு நான் தான் பொறுப்பு. லட்சத்தீவு சென்று வரவேண்டுமென்றால் ரூ.60000 ஆகும். அதை யார் எனக்கு கொடுப்பார்கள்.
இதுவரை ஒரு ரூபாய் கூட கட்சியில் இருந்து வாங்கியது கிடையாது. நான் பிச்சை எடுக்க முடியுமா? நான் தொழில் செய்துதான் ஆக வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 2000 ரூபாயாவது செலவாகும். இதனை உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்குகிறேனா… அல்லது தவறான நபர்களிடமிருந்து வாங்குகிறேனா.
நான் தொழில் செய்து என்னுடைய வாழ்க்கையை வாழவேண்டுமென்று நினைக்கிறேன். பெருமையாக தொழில் செய்து அரசுக்கு வரி கட்டுவேன். இன்னும் பல தொழில்கள் ஆரம்பிக்க போகிறேன். அதற்கான நேரமும், மன வலிமையும் இருக்கிறது” என்று பதிலளித்தார்.
