65 லட்சம் பேர் வாக்குரிமையை பறித்த பீகார் சிறப்பு திருத்தம் போல தமிழ்நாட்டில் நடைபெற்றால் அதை சட்டப்படியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாக அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் என்.ஆர். இளங்கோ நேற்று (ஆகஸ்ட் 13) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
- 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்
- தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன: அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளில் தர வேண்டும்
- தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாக நிலை அலுவலர்களையும், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படக்கூடிய பாக நிலை முகவர்களையும் இணைந்து செயலாற்ற நடைமுறைகளை வகுக்க வேண்டும்
- வாக்குப்பதிவில் சில திருத்தங்கள் முறையற்றது, அந்த முறையற்ற சில திருத்தங்களை நீக்க வேண்டும்
- பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுகிறதோ அதைபோல் தமிழ்நாட்டிலும் நடக்கும் போது ஆதார் எண்- குடும்ப அட்டை ஆகியவற்றை வாக்காளருடைய அடையாளங்களாக ஏற்க வேண்டும்.
இந்த 5 கோரிக்கைகளில் “ஆதார் எண்- குடும்ப அட்டை ஆகியவற்றை வாக்காளருடைய அடையாளங்களாக ஏற்க வேண்டும்” என்ற கோரிக்கையை மட்டும் பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் 65 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளனர். இதற்கான விளக்கத்தை தர மறுக்கும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக போராடும்.
தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு வாக்காளர் சிறப்பு திருத்தம் நடைபெற்றால் சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக அதை திமுக எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இவ்வாறு என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
திமுக மா.செ.க்கள் கூட்ட தீர்மானம் என்ன?
முன்னதாக சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் – அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்சநீதிமன்றமே “Mass deletion” இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.