சென்னையை உலுக்கிய கொலை – 5 பேர் கைது!

Published On:

| By Kavi

சென்னையை உலுக்கிய பீகார் மாநில இளைஞர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அடையாறு, இந்திரா நகர் முதல் அவென்யூ சாலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி காலை ரத்தக் கரையுடன் ஒரு மூட்டை கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அடையாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் ஒருவரது உடல் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இருந்தது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தனிப்படை போலீசார் உடல் கிடந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதேபோன்று கொலை செய்யப்பட்ட,  இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் ஒரு போன் நம்பர் இருந்துள்ளது. அதை தொடர்பு கொண்ட போது, அந்த எண் அடையாறில் உள்ள ஒரு தனியார் செக்யூரிட்டின் அலுவலகத்தின் எண் என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

பின்னர் அங்கு சென்று போலீசார் விசாரித்ததில் கொலையான நபர்  பீகாரைச் சேர்ந்த கவுரவ குமார் என்பதும் தனது மனைவி, பெண் குழந்தையுடன் இங்கு வந்து செக்யூரிட்டி வேலை கேட்டதும் தெரியவந்தது.

ஆனால் அந்த நிறுவனம் தற்போது வேலையில்லை என்று அனுப்பி வைத்துள்ளது.

இதையடுத்து கவுரவ குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டியாக இருந்து வந்துள்ளார். அந்த பகுதியிலேயே மனைவி குழந்தையுடன் வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் கவுரவ குமார் மற்றும் குழந்தையும் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே சந்தேகத்தின்பேரில் கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட 9 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

இந்த விசாரணையின் போது அவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.  அவர்கள், கவுரவ குமாரை மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து இருவரின் உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுட்டனர்.

அடையாறு கெனால் ரோடு, முகத்துவாரம், கூவம் ஆற்றங் கரையோரம், பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிரமாக தேடினர். அப்போது, குழந்தையின் உடல் அடையாறு மத்திய கைலாஷ் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் இந்த கொலை வழக்கில் விசாரணைக்குள்ளான 9 பேரில்  நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தது ஏன் என்று விசாரித்ததில்,  கவுரவ குமார் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை கவுரவ் குமார் தட்டி கேட்டதாகவும்   இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக கூறியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த கொலையை தொடர்ந்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

திமுக எம்.பி.கனிமொழி,  “காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.”  என்று கூறியுள்ளார்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share