பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (Bihar Voter List Controversy Lok Sabha) குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்ற மக்களவையை எதிர்க்கட்சிகள் இன்று முடக்கின.
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர்.

இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக இன்று ஜூலை 28-ந் தேதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவை கூடியதும், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும்; அதன் பின்னர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தலாம் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். மக்களவை சபாநாயகர் இருக்கை முன்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒன்று திரண்டு முழக்கம் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகளை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.