தமிழகத்தில் பீகார் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதாக அம்மாநிலத்தின் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரஷாந்த் கிஷோர் குற்றம்சாட்டி உள்ளார்.
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வருகிறார். இந்த யாத்திரையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி ஆகியோர் நேற்று (ஆகஸ்ட் 27) பங்கேற்றனர்.
பீகாரில் ராகுல் பேரணியில் ஸ்டாலின் பங்கேற்பதற்கு முன்னதாகவே பாஜக தலைவர்கள் மற்றும் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
பீகார் பேரணியில் பேசிய ஸ்டாலின், ” பீகார் மக்களின் பலம்! ராகுல் காந்தியின் பலம்! தேஜஸ்வியின் பலம்! இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பியிருக்கிறது. இதுதான் வரலாறு!
‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை அவர் திரட்டினார். அந்தப் பணியைத்தான், அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களும், தம்பி தேஜஸ்வி அவர்களும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பீகாரில் ராகுல் பேரணியில் ஸ்டாலின் பங்கேற்றது குறித்து கருத்து தெரிவித்த ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், பீகாருக்கு ஸ்டாலின் வந்து சென்றுள்ளார்; இதே பீகாரின் குழந்தைகள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்ட போது எங்கே போனார் ஸ்டாலின்? என கேள்வி எழுப்பினார். ஆனால் தமிழ்நாட்டில் பீகார் குழந்தைகள் எப்போது படுகொலை செய்யப்பட்டனர் என்பதை பிரசாந்த் கிஷோர் விளக்கவில்லை.
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன. இது தொடர்பாக பீகார் மாநில அரசின் குழு தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்து அது வதந்தி என உறுதி செய்தது. தற்போது, தமிழகத்தில் பீகார் குழந்தைகள் கொல்லப்பட்டதாக பிரசாந்த் கிஷோர் புது புரளியை கிளப்பிவிட்டுள்ளது பேசு பொருளாகி இருக்கிறது.