பீகார் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. அவரது கட்சியின் 51 வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், முன்னாள் அதிகாரிகள் பலரும் பிரசாந்த் கிஷோர் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான உதய் சிங், பீகார் தேர்தலுக்கான அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (அக்டோபர் 9) வெளியிட்டார். இந்த பட்டியலில் மொத்தம் 51 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவரான பிரீத்தி கின்னார், கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது கோபால்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து பின்னர் நிதிஷ்குமாரின் ஜேடியூவில் இணைந்த சுனில்குமார், தற்போது பீகார் கல்வி அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
யார் யாருக்கு வாய்ப்பு?
பிரசாந்த் கிஷோர் கட்சி வெளியிட்டுள்ள இந்த வேட்பாளர்கள் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 16% வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 17% வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், முன்னாள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கும் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார். பாட்னா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தரும் கணிதவியலாளருமான கேசி சின்கா, கும்ரார் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒய்பி கிரியையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளார் பிரசாந்த் கிஷோர். பாட்னா உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பல வழக்குகளில் வாதாடியவர் ஒய்பி கிரி.
பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை?
தற்போதைய நிலையில் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. அதனால் பீகார் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனாலும், பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்கின்றனர் ஜன் சுராஜ் கட்சியினர்.
யார் இந்த பிரசாந்த் கிஷோர்
குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது அவருக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் பிகே எனும் பிரசாந்த் கிஷோர். இதேபோல பாஜக, ஜேடியூ, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக பிகே பணியாற்றி இருக்கிறார்.
பீகார் தேர்தல்
பீகார் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் முதல் கட்டமாக 121 தொகுதிகளிலும் 2-வது கட்டமாக 122 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று (அக்டோபர் 10) வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ந் தேதி நடைபெறும்.