பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
பீகார் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனால் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (அக்டோபர் 6) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர், பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் முறையாக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் வரை உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனைகள் காலம் இருந்தது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பீகாரில் மொத்தம் 3.92 கோடி பெண் வாக்காளர்கள், 7.42 கோடி ஆண் வாக்காளர்கள் என 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
90,712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் சராசரியாக 818 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை 100% முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்.
தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வன்முறை இல்லாமலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தேவையான அளவு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர்” என்றார்.
தேர்தல் தேதி

மேலும் அவர், “இரண்டு கட்டங்களாக பீகார் தேர்தல் நடைபெறும். முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் . இந்த தொகுதிகளில் வரும் 10ஆம் தேதி மனு தாக்கல் தொடங்குகிறது. 2ஆம் கட்டமாக 122 தொகுதிகளில் நவம்பர் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறும் . இதற்கு வரும் 13ஆம் ததி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
