என்ன வேண்டுமானாலும் பேசலாம்; எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் எவரையும் எடுத்தெறிந்து அவமானப்படுத்தலாம் மாட்டிக் கொண்டால் யாரிடமும் பேச்சை மாற்றி தப்பிக்கலாம். எல்லோர் மேலும் வன்மம் காட்டலாம். கமருதீனிடமும் விஜய் சேதுபதியிடமும் குனிந்து வளைந்து நெளிந்து குழைந்து சிரித்து இளித்து பசப்பி தப்பிக்கலாம். தான் செய்த தவறை எல்லோரும் எப்பவாவது கண்டுபிடித்து லாக் செய்தால் உடைந்து அழுது சமாளிக்கலாம்’
ஆகிய உயரிய தத்துவக் கொள்கைக் கோட்பாடுகளோடு பிக் பாஸில் இருப்பவர் பாரு எனப்படும் விஜே பார்வதி
பொதுவாக போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் வாரத்தில் பெரிதாக சண்டைகள் இருக்காது . இந்த வாரமும் அது குறைவே.
அப்படி வருபவர்கள் தங்கள் குடும்பத்துப் போட்டியாளர்களை ரொம்பவும் டார்ச்சர் செய்யும் மற்ற போட்டியாளர்களை சற்றே விமர்சிப்பதும் சகஜம்தான்,
ஆனால் அப்படி மற்ற போட்டியாளர்களின் உறவினர்களால் அதிகம் அடித்து உடைத்து இடித்து நொறுக்கி பவுடர் ஆக்கப்பட்ட நபர் என்ற சாதனையையும் படைத்தார் பார்வதி.
திவ்யாவின் அப்பா கணேசன், பாரு என்னென்னெ செய்கிறார்; எப்படி எப்படி எல்லாம் கோல் மூட்டி குளிர் காய்கிறார் என்பதை, ஒரு சக போட்டியாளரின் லாவகத்தில் சொன்னபோது, மற்ற போட்டியாளர்கள் ஆடித் தீர்த்து விட்டார்கள். இப்படியாக கணேசன் பாரு என்னும் பர்னிச்சரை முரட்டு அடி அடித்தார்
பாருவின் அண்ணன் , உறவினர்கள் எல்லாம் கிரிமினல் வக்கீல்கள் என்று சொல்லி இருந்தார் பாரு. எனவே பாருவின் வீட்டு ஆட்கள் வரும்போது ரொம்ப பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது .
காரணம் பாரு – கம்ருதீன் இடையேயான நட்புக்கும் மீறிய ‘ இது’ .
அது பாரு குடும்பம் கம்ருதீன் குடும்பம் இரண்டுக்கும் பிடிக்காது என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் வெளிப்பட்ட விதம்தான் வேறு வேறு ரகம் முக்கியமாக பாருவின் உறவினர்களுக்கு மட்டும் ஒரு நாள் முழுக்க இருக்கும் சலுகை கொடுக்கப்பட்டது.
உண்மையில் அந்த வாய்ப்பு ஆதிரை விளையாடிப் பெற்ற வாய்ப்பு.. அவர் வெளியேறியதால் அந்த வாய்ப்பை அவர் எவருக்காவது கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டது. கனி திருவுக்கு கொடுப்பார் என்று எல்லோருக்கும் எதிர்பார்க்க , ஆதிரை அதை பாருவுக்கு கொடுத்தார்.
பாரு அதை ஏதோ தனக்கு கொடுக்கப்பட்ட சலுகை என்று எண்ணி ஆதிரைக்கு அழுதபடி எல்லாம் நன்றி சொன்னார்.
ஆனால் ……..
பாருவின் வீட்டார் ஒரு நாள் முழுக்க வீட்டில் இருக்க வேண்டும். அடுத்தடுத்து வரும் மற்ற போட்டியாளர்களின் உறவினர்கள் பாருவிடம் ரியாக்ட் செய்வதை அவரது உறவினர்கள் பார்க்க வேண்டும் முக்கியமாக கமருதீனின் உறவினர் வந்து பாருவை நொறுக்குவதை பாருவின் உறவினர்கள் பார்க்க வேண்டும் என்று ஆதிரை பிளான் பண்ணித்தான் அந்த சலுகையை பாருவுக்கு கொடுத்தார் என்பது புரிந்தது.
பாரு வீட்டாருக்கு இது புரிந்து விட்டது போல.
எனவே கிரிமினல் வக்கீல்கள் ஒருவர் கூட உள்ளே வரவில்லை . பெற்ற கடனுக்காக பாருவின் அம்மா மட்டும் வந்திருந்தார். மகளை அம்மா விட்டுக் கொடுக்கவில்லை என்றாலும் வந்தவுடன் பாருவிடம் , ” அண்ணனுக்கு விக்ரமைதான் பிடிக்கும்”என்றதும் ஷாக் ஆனார் பாரு. ஏனெனில் பாருவுக்கு விக்ரம் என்றால் பிடிக்காது.
அடுத்து அரோராவின் தோழி ரியா பாரு பர்னிச்சரை தன் பங்குக்கு உடைத்தார்.
கம்ருதீன் குடும்பம் வந்த போது பரபரப்பு இன்னும் அதிகம் ஆனது .
கம்ருதீன் அக்காவின் கணவர் பாருவிடம் , “நான் கமருதீனின் ரிலேஷனா மட்டும் இருந்திருந்தா உன் கிட்ட நிக்க மாட்டேன் . ஆனா அவன் என் நண்பன் . அதனால சொல்றேன். தனித்தனியா அவங்க அவங்க விளையாட்டை விளையாடுங்க” என்று பர்னிச்சரை இடித்தார்
வீட்டுக்குள் வந்த கமருதீனின் அக்காவை பாரு , “வாங்க அக்கா ..” என்று சொல்ல, நான் உன் அக்காதான் . ஞாபகம் வச்சுக்க” என்றதோடு விடவில்லை. ” இது ரியாலிட்டி ஷோ , பேமிலி குழந்தைகள் எல்லாம் பாக்கறாங்க. டீசன்ட்டா நடந்துக்க ” என்று பாரு பர்னிச்சரை பவுடர் செய்தார் .
இது போதாது என்று வாரக் கடைசியில் விஜய் சேதுபதி வேறு பர்னிச்சர் பவுடரை சலித்து எடுத்தார் .
நான் மட்டும் மட்டமா என்று ஒரு நிலையில் கமருதீனும் சலித்த பவுடரை மீண்டும் நைசாக அரைத்தார்.
இப்படி ஒரு நொறுக்கல் இது வரை எந்த பிக் பாஸ் சீசனிலும் எந்த ஒரு போட்டியாளரும் அனுபவித்தது இல்லை.
ஆனால் நம்ப முடியாது. இதற்காகவே வின்னர் கோப்பையை பாருவுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள்.
அதுதான் பிக்பாஸ்
