எல்லாம் மகளுக்காக… இசைக்கலைஞர்களுக்கு இளையராஜா அளிக்கும் வாய்ப்பு!

Published On:

| By Kavi

தனது மகள் பவதாரணியின் நினைவாக அவரது பெயரில் ஆர்கேஸ்ட்ரா ஒன்றை உருவாக்கவிருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகி பவதாரணி, கடந்த ஜனவரி 25, 2024 அன்று தனது 47வது வயதில் கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்கையில் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ADVERTISEMENT

பவதாரணி மறைந்த சில தினங்களிலேயே, இளையராஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், மகளின் குழந்தைப் பருவப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “அன்பு மகளே…” என்று தலைப்பிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த ஆண்டு, ஜனவரி 25, 2025 அன்று, பவதாரணியின் முதல் நினைவு நாளில், இளையராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான ஆடியோ பதிவை வெளியிட்டார். அதில், “என் அருமை மகள் பவதா எங்களை விட்டுப் பிரிந்த நாள். அந்தக் குழந்தை பிரிந்த பின்புதான், அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது,” என்று பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இசையின் மீது தனது முழு கவனமும் இருந்ததால் தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போனது தனக்கு இப்போது வேதனையைத் தருவதாகவும், அந்த வலியே மக்களுக்கு ஆறுதல் தரும் இசை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பவதாரணியின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும், இளையராஜா ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

ADVERTISEMENT

தனது மகள் இளம் சிறுமிகளுக்காக ஒரு இசைக்குழுவை உருவாக்க வேண்டும் என்ற கனவை கொண்டிருந்ததாகவும், அதை நனவாக்கும் விதமாக “பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா” என்ற பெயரில் பெண் குழந்தைகளுக்கான இசைக்குழுவை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

15 வயதுக்குட்பட்ட திறமையான பாடகிகள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு இந்த ஆர்கெஸ்ட்ராவில் சேர வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் திறமைகள், சுயவிவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்களை  allgirlsorchestra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் இளையராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share