காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்காக திருச்சியை அடுத்துள்ள புகழ்பெற்ற திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஜூலை 4-ந் தேதி சிறப்பு யாகம், ஹோமம் நடைபெற்றது. Rahul Gandhi Congress
தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் பைரவர் வழிபாடு மிகவும் புகழ் பெற்றது.
பொதுவாக அனைத்து சிவன் கோவிலிலும் வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி கால பைரவர் இருப்பார். ஆனால் இக்கோவிலில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார். இவரின் வலது செவியும் மற்ற தலங்களில் உள்ளது போல் இல்லாமல் வித்தியாசமாக உள்ளது.
ராகு கால வேளையில் கால பைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளை சொல்லி வணங்குவதற்காகத்தான் இத்தலத்தில் காலபைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது என்பது இந்த கோயிலைப் பற்றிய நம்பிக்கை.
கால பைரவரிடம் முக்கியமான வேண்டுதல்களை வைத்து வணங்குவதும் அது நிறைவேற்றப்படுவதும் திருப்பட்டூர் தலத்தின் மீதான நீண்ட நாள் நம்பிக்கை.

ஜோதிடர்கள் காலபைரவர் தோஷம் அல்லது காலபைரவருக்கான பரிகாரத்துக்காக திருப்பட்டூர் கோவிலில் வழிபாடு செய்யுமாறு பரிந்துரைப்பதும் பரவலாக நடைபெறுகிறது.
இந்த பின்னணியில் தான் ஜூலை 4-ந் தேதி திருப்பட்டூர் காலபைரவர் கோவிலில் ராகுல் காந்திக்காக பைரவ ப்ரீத்தி ஹோமம் நவக்கிரக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பே தொடங்கிவிட்டன. ஜூலை 5-ந் தேதி பகல் 1:30 மணி வரை இந்த பூஜைகள் நடந்தன.
சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் மத்திய அமைச்சர் கேரளாவை சேர்ந்த முள்ளபள்ளி ராமச்சந்திரன் மகனிடம் இதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டது. அவர் தனது தமிழ்நாடு காங்கிரஸ் நண்பர்களிடம் இது குறித்து பேசி இந்த சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் அனுப்பிய நான்கு பேர் ராகுல் காந்திக்காக டெல்லியில் இருந்து திருப்பட்டூர் கோவிலுக்கு வந்து பூஜைகளை நடத்தி ராகுல் காந்திக்கு பிரசாதத்தை பெற்று சென்றார்கள்.
இதற்காக தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, எள்ளு சாதம் ஐந்து வகை பிரசாதங்கள் நைவேத்தியம் செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கோவிலில் வழங்கப்பட்டது. ராகுல் காந்திக்கு பைரவ தோஷமா என்று காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது… “தமிழ்நாடு காங்கிரஸில் பலருக்கும் இந்த விஷயம் தெரியாது. அவர்களின் நூறு சதவீத தனிப்பட்ட விஷயம். ஆனால் ராகுலுக்காக திருப்பட்டூர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது உண்மை” என்கிறார்கள். இதற்காக சுமார் ரூ 1.5 லட்சம் செலவிடப்பட்டதாகவும் சொல்கின்றனர்.