தமிழ்நாட்டில் பரவலாக கிடைக்கும் நிலக்கடலை அனைத்து தரப்பினரும் சாப்பிடும் பொதுவான சிற்றுண்டியாக உள்ளது. ஏழைகளின் முந்திரி என்று நிலக்கடலை அழைக்கப்படுகிறது. ஏனெனில் நிலக்கடலையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை இவை வழங்குகின்றன. குளிர்காலத்தில் நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், கிடைக்கும் சத்துக்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குளிரிலிருந்து பாதுகாக்கும் நிலக்கடலை: நிலக்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க உதவுவதோடு, உடனடி ஆற்றலை வழங்குகின்றன. சோர்வைப் போக்குவதால் நிலக்கடலையை சிற்றுண்டியாக சாப்பிடுவது மிகவும் நன்மை
புரதச்சத்து: நிலக்கடலையில் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கடலையில் சுமார் 25 கிராம் புரதம் உள்ளது. இது புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. குறிப்பாக சைவ உணவு சாப்பிடுவதற்கு புரதச்சத்து கிடைக்க இது ஒரு நல்ல மாற்று. குளிர்காலம் என்பது புரதச்சத்து தேவையான நேரம் என்பதால் நிலக்கடலையை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: நிலக்கடலையில் வைட்டமின்கள் இ, பி6 உள்ளன. மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது.
எடை மேலாண்மை: நிலக்கடலையில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் கூட புரதம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. ஆகவே, சாப்பிட்ட திருப்தியை நீண்ட நேரம் அளித்து, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை குறைவாகவும், உடல் நிறை குறியீட்டு எண் குறைவாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேர்க்கடலை சாப்பிடுவது, பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களுடன் இணைந்து செயல்பட்டு, பசியைக் குறைக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை விரிவாக அதிகரிப்பதை இது தடுக்கிறது. நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவு நிலக்கடலை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.
கடலையை எப்படி சாப்பிடுவது? வேர்க்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ அல்லது கடலை மிட்டாய், சட்னி போன்ற பல வகைகளில் சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த வேர்க்கடலையைத் தோலுடன் சாப்பிடுவது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு உதவும்.
அளவு முக்கியம்: அதிகமாக வேர்க்கடலை சாப்பிடுவது எடை அதிகரிப்பு, வாயு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே, ஒவ்வாமை இருப்பவர்கள் கடலையை தவிர்ப்பது நல்லது. குளிர்காலத்தில் நிலக்கடலை சுவையாக இருப்பதோடு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நிலக்கடலையை சாப்பிட்டு அதன் ஊட்டச்சத்துக்களை பெறுங்கள் மக்களே..
