பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்வதற்கு முன்னதாக சென்னையில் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Anbumani Delhi Visit
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையேயான மோதல் நீடித்து வருகிறது. பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் நானே; பாமகவின் செயல் தலைவர்தான் அன்புமணி என்கிறார் ராமதாஸ். ஆனால் பாமகவின் தலைவராக தொடருவேன் என்கிறார் அன்புமணி.
ராமதாஸ்- அன்புமணிக்கு இடையே சமாதானம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ராமதாஸின் மகள்கள் ஶ்ரீ காந்தி, கவிதா மற்றும் பாஜகவின் அதிகார மையமான ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஆனால் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
பாமகவில் அன்புமணி ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்தார் ராமதாஸ். ஆனால் நீக்கப்பட்டவர்களே பொறுப்புகளில் நீடிப்பதாக அன்புமணி அறிவித்தார்.
அன்புமணியின் பாமக தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டது என்கிறார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அடுத்த ஆண்டு வரை தாமே பாமகவின் தலைவர் என்கிறார் அன்புமணி.
இந்த நிலையில் பாமக மற்றும் அதன் மாம்பழ சின்னத்துக்கு உரிமை கோரி இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றுள்ளார்.
டெல்லி பயணத்துக்கு முன்னதாக சென்னையில் மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, பாமகவின் எந்த சட்ட விதிகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் வாதங்களை முன்வைப்பது என பண்ருட்டி ராமச்சந்திரனிடம் அன்புமணி ஆலோசனை நடத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், 1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமகவின் யானை சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது சட்டமன்ற கூட்டத்துக்கு யானையில் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சில ஆண்டு களிலேயே பாமகவில் இருந்து விலகினார். பின்னர் தனிக் கட்சி, தேமுதிக, அதிமுக தற்போது அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.