டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்குக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரும் NIA-ன் வழக்கு விசாரணை நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் யாசின் மாலிக் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் 2022-ம் ஆண்டு யாசின் மாலிக்குக்கு விசாரணை நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கு எதிராக, யாசின் மாலிக்குக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரியது தேசிய புலனாய்வு ஏஜென்சி NIA.
NIA-ன் இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. டெல்லி உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் விவேக் சவுத்ரி, மனோஜ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறையில் இருந்து யாசின் மாலிக் ஆஜராகி இருந்தார். அப்போது, 3 ஆண்டுகளாக நடைபெறும் இவ்வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என யாசின் மாலிக் வலியுறுத்தினார். இவ்வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
யாசின் மாலிக்குக்கு தூக்கு தண்டனை விதிக்க கோரும் NIA மனு மீதான விசாரணை நடைபெற்ற சில மணிநேரத்திலேயே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம நிகழ்ந்தது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியான விசாரணை தகவல்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளே இந்த நாசவேலைக்கு காரணம் என்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
