தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது இன்று (அக்டோபர் 6) தனது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் உடனடியாக சட்டப் பயிற்சியில் இருந்து இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு இன்று காலை ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் நீதிபதி கவாய் மீது தான் அணிந்திருந்த காலணியை கழற்றி வீச முயற்சித்தார். இதனை கவனித்த அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கறிஞரை உடனடியாக விசாரணை அறையிலிருந்து வெளியேற்றினர்.
அப்போது “சனாதன தர்மத்திற்கு அவமதிப்பு செய்வதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று வழக்கறிஞர் ராகேஷ் கோஷம் எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
எனினும் இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற அமர்வில் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் பேசிய பி.ஆர்.கவாய், ”இதற்கெல்லாம் கவனம் சிதற தேவையில்லை. இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்து வழக்கு விசாரணையைத் தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் தொடர்பான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல்காந்தி கண்டித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதல் நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வு மீதான தாக்குதல் ஆகும். இத்தகைய வெறுப்புக்கு நம் நாட்டில் இடமில்லை, அது கண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதே போன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்காதது அதிருப்தியை அளித்துள்ளது.
இதற்கிடையே தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்றதற்காக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இடைநீக்கம் செய்துள்ளது இந்திய பார் கவுன்சில்.
வழக்கறிஞர்கள் சட்டம், 1961 மற்றும் தொழில்முறை நடத்தை மற்றும் ஆசாரம் குறித்த தரநிலைகள் குறித்த இந்திய பார் கவுன்சில் விதிகளின் கீழ் பிசிஐ பிறப்பித்த இடைக்கால இடைநீக்க உத்தரவில் பிசிஐ தலைவரும் மூத்த வழக்கறிஞருமான மனன் குமார் மிஸ்ரா கையெழுத்திட்டுள்ளார்.
2