இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் ஓய்வை அறிவித்து விட்டனர்.
இந்த நிலையில் 2027 ஒருநாள் உலகக் கோப்பை குறிவைத்து இருவரும் உள்ளனர். இதற்கிடையே இந்த ஆண்டு இறுதியில் நடைபெற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடனான தொடருடன் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் என பேச்சு எழுந்துள்ளது.
அவர்கள் இந்திய அணியில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால், உடற்தகுதியுடன் எப்போதும் இருக்க வேண்டும் எனவும், இந்தியாவின் உள்நாட்டு போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்க வேண்டும் எனவும் பிசிசிஐ நெருக்கடி அளித்து வருகிறது.
கோலி மற்றும் ரோஹித் குறித்து கவலையில்லை!
இதுதொடர்பாக பெயரிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”தற்போது கோலி மற்றும் ரோஹித்தின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ சிறிதும் கவலைப்படவில்லை, வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில் இந்திய அணி முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது.ரோஹித் மற்றும் கோலி இருவரும் ஓய்வு குறித்து ஏதாவது மனதில் வைத்திருந்தால், இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்பு செய்தது போல் பிசிசிஐ அதிகாரிகளிடம் கூறுவார்கள்” என தெரிவித்தார்.
இதனையடுத்து கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை செய்த ரோகித் – கோலி இருவரையும் பிசிசிஐ அவமதிப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

கங்குலி ஆதரவு!
அதேவேளையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, இருவரும் தொடர்ந்து விளையாட வேண்டும் ஊக்கப்படுத்தியுள்ளார்.
பேசுகையில், “ரோகித் கோலி ஓய்வு பற்றி எனக்கு தெரியாது, இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. இதுகுறித்து கருத்து சொல்வது கடினம். ஒருநாள் தொடரில் அவர்கள் நன்றாக விளையாடினால், அவர்களை யாரும் தடுக்க முடியாது. கோலியின் ஒரு நாள் சாதனை அற்புதமானது, ரோஹித் சர்மாவின் அப்படிதான். அவர்கள் இருவரும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தனித்துவமானவர்கள்” என கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் தொடர் பயணம்!
இந்திய அணியானது வரும் அக்டோபர் 19 முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் ஒருநாள் தொடர் இந்தியாவில் நவம்பர் மாதம் நடைபெறும்.
2026 ஆம் ஆண்டில் இந்தியா அணியானது நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.