ஜெய ஜெய ஜெய ஹே, பேலிமி, குருவாயூர் அம்பலநடையில், பொன்மன், மரணமாஸ் உட்படச் சமீப ஆண்டுகளில் பசில் ஜோசப் நடிப்பில் வெளியான பல படங்கள் மலையாள சினிமாவில் ‘ஹிட்’ அடித்திருக்கின்றன. அப்படங்களில் அவரது நடிப்பைப் பாராட்டுகிற ரசிகர்கள் ‘அடுத்த படத்தை எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க’ என்று கேட்பதே வழக்கமாய் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு, அவர் இயக்கிய ‘குஞ்ஞிராமாயணம்’, ‘கோதா’ மற்றும் ஓடிடியில் புதிய சாதனை படைத்த ‘மின்னல் முரளி’ படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவை.
தற்போது தமிழில் சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் காம்பினேஷனில் உருவாகிற ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார் பசில் ஜோசப். மலையாளத்தில் கடந்த பத்து மாதங்களாகப் புதிய படம் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
’அடுத்த படம் டைரக்டராக களமிறங்குவது’ என்பதில் பசில் தீவிரமாக இருக்கிறார். ரன்வீர்சிங்கை நாயகனாகக் கொண்டு ‘சக்திமான்’ டைப்பில் ஒரு திரைப்படத்தை அவர் இந்தியில் இயக்குவதாகத் தகவல் உலா வருகிறது. இல்லை, அவர் சூர்யா அல்லது அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்குவார் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர்.
இது பற்றிப் பசில் ஜோசப் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை.
சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், மீண்டும் இயக்குனராகக் களமிறங்குவதில் தான் கொண்டுள்ள உறுதியைப் பசில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நான்காண்டுகளுக்குப் பிறகு இயக்குனராகக் களமிறங்கக் கிடைத்த இரு வேறு வாய்ப்புகள் தள்ளிப் போவது குறித்து, அதில் தனது வருத்தங்களைப் பகிர்ந்திருக்கிறார். ‘தொடர்ந்து நடிச்சிட்டே இருந்தா, ‘டைரக்ட்’ பண்றதையே மறந்திடுவேன்’ என்று விரக்தியடையும் அளவுக்குப் புதிய படம் இயக்குவது குறித்த எண்ணம் தனது மனதை ஆக்கிரமித்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
“படம் டைரக்ட் பண்ணனும்கற எண்ணத்துல, புதிதாக எந்த படத்தையும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பசில். கூடவே, படைப்பு சுதந்திரத்தைத் தரும் இயக்குனர் அந்தஸ்தை நீண்ட காலமாகத் தவறவிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ரசிகர்கள் கொண்டாடுகிற ‘கமர்ஷியல்’ படங்களில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வதென்பது சாதாரண விஷயமில்லை. அப்படியொரு வெற்றிகரமான நடிகராகத் திகழ்கிற பசில் ஜோசப், இயக்குனராகவும் மேலும் பல உயரங்களைத் தொட வேண்டுமென்பதுதான் அவரது ரசிகர்களின் அவா.
அதேநேரத்தில், எந்த காரணத்திற்காகவும் அவரது சுவைமிகு நடிப்பை ‘மிஸ்’ செய்ய ரசிகர்கள் தயாராக இல்லை என்பதே உண்மை.
பசில் கிடைச்ச ‘கேப்’ல கொஞ்சம் நடிக்கவும் செய்யுங்க.. டைரக்ஷனோ, ஆக்டிங்கோ இரண்டுமே ரசிகர்களுக்காகத்தானே..!