ADVERTISEMENT

திருமாவளவன் கார் மோதிய சர்ச்சை: விசாரணை குழு அமைத்த பார் கவுன்சில்

Published On:

| By Pandeeswari Gurusamy

Bar Council formed a special investigation team

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கார், இருசக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படும் நிலையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு பார் கவுன்சில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் அருகே கடந்த 7ஆம் தேதி சமத்துவ வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.

ADVERTISEMENT

அங்கிருந்து அவர் கிளம்புகையில், ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் வாகனத்துடன் திருமாவளவன் சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜீவ் காந்தி தனது வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இருதரப்பினருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

இதில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் வலியுறுத்தினர். அதேசமயம், ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையும் மற்றொரு தரப்பினரால் வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். பார் கவுன்சில் இணைத் தலைவர் ஆர்.அருணாச்சலம் மற்றும் டி.சரவணன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்து, உரிய விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பது அல்லது நீதி நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிப்பது போன்றவற்றை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share