மலையாள நடிகர் துல்கர் சல்மானும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் சேர்ந்து தயாரிக்க, துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி,பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் வரும் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட படம் காந்தா.
1950களில் புகழ் பெற்ற தமிழ் இயக்குனரான அய்யா மற்றும் அவரால் பிரபலமான டி. கே. மகாதேவன் இருவருக்கும் இடையிலான உறவு, பகை என்று போகும் படம். மகாதேவன் சாந்தா என்ற பெயரில் ஆரம்பித்த ஒரு படத்தின் பெயரை காந்தா என்று மாற்றும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
தமிழ்த் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான எம் கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எம் கே தியாகராஜ பாகவதரின் பேரன் பி. தியாகராஜன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் படத்தை வெளியிடுவதற்கு எதிராக நிரந்தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பெட்டிஷன் கொடுத்துள்ளார்.
படத்தில் தியாகராஜ பாகவதரின் குணாதிசயம் குறித்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத விதமாகக் காட்டி இருக்கிறார்கள் என்றும் தியாகராஜ பாகவதரின் சட்டப்படியான வாரிசுகள் யாரிடமும் முறைப்படி அனுமதி பெறவில்லை என்றும் புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கை நீதிமன்றம் வரும் 18ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
படத்தை 14ஆம் தேதி ரிலீஸ் செய்து விட்டு படக்குழு வழக்கை எதிர்கொள்ளுமா? அல்லது தியாகராஜனிடம் சமாதானத்துக்குப் போகுமா என்பதை பொறுத்தே படம் 14 ம் தேதி ரிலீஸ் ஆகுமா இல்லையா என்பதைச் சொல்ல முடியும்.
பொறுத்திருந்து பார்ப்போம்
பின்னே?
பாகுபலியில்தான் தமிழின் முக்கியமான சரித்திர நாவல்கள் பலவற்றையும் சுட்டு, கோடிகோடியாக சம்பாதித்தார்கள். பாகவதரின் பட்டு வேஷ்டி அடிமடியிலேயே கை வைத்தால் சும்மா இருப்பார்களா?
- ராஜ திருமகன்
