பிரதமர் கோவை வருகையை முன்னிட்டு அவர் செல்லும் பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை (மார்ச் 29) பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து நாளை விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வருகிறார். பின்னர் சாலை மார்க்கமாக பாலக்காடு செல்கிறார். பிரதமர் மோடி கோவை வருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிவப்பு மண்டல பகுதிகளுடன் அவிநாசி சாலை, நேரு நகர், சிட்ரா, பீளமேடு, SIHS காலனி, சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், காளப்பட்டி, போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, நீலாம்பூர், சிந்தாமணி, செட்டிபாளையம், மதுக்கரை, எட்டிமடை, வாளையார் ஆகிய பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையினை மீறி ட்ரோன்களைப் பறக்க விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும் என கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
