லட்சுமி மேனனை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கும்கி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி மேனன். இப்போது பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி கேரளாவின் கொச்சி பேனர்ஜி சாலையில் இருக்கும் வெலாசிட்டி என்ற இரவு நேர சொகுசு பாருக்கு லட்சுமி மேனன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது லட்சுமி மேனன் தரப்புக்கும், அங்கு வந்திருந்த இளைஞர்கள் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
பாருக்கு வெளியே நின்றிருந்த காரியில் இருந்த இளைஞர்கள லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் மிரட்டும் வீடியோவும் வெளியாகியிருந்தது.
அதோடு சிட்டி கார்னர் இடத்தில் வைத்து மற்றொரு தரப்பினர் சென்ற காரை மறித்த நடிகையின் நண்பர்கள், அதிலிருந்த ஐடி ஊழியர் ஒருவரைக் கடத்திச் சென்று வலுவாக தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக எர்ணாகுளம் காவல்நிலையத்தில் அந்த ஐடி ஊழியரும், அவரது நண்பர்களும் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் கடத்தல், அடித்து சித்ரவதை உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகிய 3 பேரையும் எர்ணாகுளம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளார்.
இந்தநிலையில் அவர் முன் ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன் இன்று (ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்தது.
அப்போது, என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை., இந்த குற்றச்சாட்டில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று லட்சுமி மேனன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, லட்சுமி மேனனை செப்டம்பர் 17ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.