பாதி இருக்குது.. மீதி எங்க..?!
முதல் படம் வெளியாவதற்கு முன்னரே, ‘இவரோட இசை அசத்தலாக இருக்கும்’ என்கிற பேச்சு சாய் அப்யங்கரைப் பற்றிச் சுழன்றாடத் தொடங்கியிருக்கிறது. அதற்கு, அவர் தந்த மியூசிக் ஆல்பம் பாடல்களே காரணம். அதனாலேயே, பலர் அவரைக் கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில், ’படத்துக்கு இசையமைச்ச பிறகே, அவரோட திறமை நமக்குத் தெரிய வரும்’ என்று சொல்பவர்களும் உண்டு. தற்போது வெளியாகியுள்ள ‘பல்டி’, சாய் அப்யங்கரின் இசையில் வெளியாகிற முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகும் இப்படமானது மலையாள இளம் நாயக நடிகரான ஷேன் நிகம்மின் 25வது படைப்பு எனும் பெருமையையும் பெறுகிறது. அயோத்தியில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி, சாந்தனு பாக்யராஜ், செல்வராகவன், ‘பிரேமம்’ தந்த அல்போன்ஸ் புத்ரன் ஆகியோரும் இதிலுண்டு என்பது கூடுதலாகக் கவனத்தை ஈர்த்தது.
சரி, எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘பல்டி’?

தவறான வழி..!
நான்கு நண்பர்கள். கபடி விளையாட்டில் ‘கில்லி’களாக இருக்கின்றனர். அந்த அணியைத் தாங்கும் தூண்களாக இருக்கிற அவர்கள் மீது எதிரணி வீரர்கள் ‘ஆத்திரம்’ கொள்கின்றனர். ஒருநாள் அவர்களைத் தாக்க முற்படுகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, எதிரணியை நடத்தி வரும் மனிதரை அவர்கள் சந்திக்கின்றனர். அவர் வட்டிக்குப் பணம் தரும் தொழிலைப் பெரிய அளவில் செய்து வருகிறார்.
தங்களது அணிக்காக ஆட முடியுமா என்கிற அந்த மனிதரின் கேள்வியும் ‘நிறைய பணம் தருகிறேன்’ என்ற வாக்குறுதியும் அதுவரை அவர்கள் பின்பற்றி வந்த நியதிகளைக் கைவிட வைக்கின்றன.
அந்த கபடி போட்டியில் அவர்கள் ஈட்டுகிற வெற்றி, இன்னொரு அணியின் உரிமையாளரோடு மோதும் சூழலை ஏற்படுத்துகிறது. அவரும் வட்டித் தொழில், சாராயக் கடத்தல் உட்படப் பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருபவர் தான்.
அதன் எதிரொலியாக நிகழும் இன்னொரு சம்பவம், முதலில் சொன்ன மனிதர் நடத்தி வரும் வட்டி தொழிலில் அந்த நான்கு நண்பர்களும் இறங்கக் காரணமாகிறது.
அவருக்காகப் பணம் வசூலித்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுவதில் அந்த நால்வரும் வெவ்வேறுவிதமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும், நண்பர்களாக ஒருமித்து நிற்கின்றனர். அந்த மனிதரின் பலமாகத் திகழ்கின்றனர்.
இது, விபசாரத்தில் ஈடுபட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு நிதி நிறுவனம் என்ற பெயரில் வட்டிக்குப் பணம் கொடுக்கிற வேலையில் ஈடுபடுகிற பெண்மணியைக் கவனிக்க வைக்கிறது.
வட்டித் தொழில் வழியே, அந்த சுற்றுவட்டாரத்தில் அதிகார மையமாக உருவெடுக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாக உள்ளது. அதற்கு, மற்ற இருவரும் தடையாக இருந்து வருகின்றனர்.
கந்து வட்டி மூலமாகப் பணம் சம்பாதிக்கும் வேட்கை கொண்ட அம்மூவரால் நண்பர்கள் நால்வரது வாழ்க்கையும் தடம் புரள்கிறது. அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘பல்டி’.
இந்தக் கதையில் நான்கு நண்பர்களாக உதயன், குமார், ரமேஷ், மணி ஆகிய பாத்திரங்களில் முறையே ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், சிவா ஹரிஹரன், ஜெக்சன் ஜான்சன் ஆகியோர் நடித்துள்ளனர். காவேரி எனும் பாத்திரத்தில் வரும் ப்ரீத்தி அஸ்ரானி இதில் நாயகி.
பொற்றாமரை பைரவன் எனும் பாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். சோடா பாபு, கௌரி எனும் ஜி-மா பாத்திரங்களை அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் இருவரும் ஏற்றிருக்கின்றனர்.
தவறான வழியில் செல்வது தொடக்கத்தில் இனிமையாக இருந்தாலும், பாதிப் பயணத்திலேயே எதிர்காலம் இருண்டு போகிற உணர்வு ஏற்பட்டுவிடும். அதனைச் சொல்கிற விதமாகக் கதை இருந்தாலும், திரையில் அதனைச் சரிவரக் கடத்தத் தவறியிருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம்.
முன்பாதி முழுக்க நான்கு நண்பர்களின் சாகசங்கங்கள் கொண்டதாகவும் பின்பாதியில் அவர்களது தவறான முடிவுகள் ஏற்படுத்தும் விளைவுகள் எத்தகையது என்று சொல்வதாகவும் உள்ளன.
இரண்டும் வெவ்வேறுவிதமான ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’டில் கையாளப்பட்டிருப்பதே இப்படத்தை முழுமையாக ரசிப்பதில் நம் முன் இருக்கும் சிக்கல். ‘பல்டி’யின் பலவீனமும் அதுவே.

சில ப்ளஸ், மைனஸ்..!
கோவை – பாலக்காடு எல்லைப்பகுதியில் நிகழ்கிற கதையாக ‘பல்டி’ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், இதில் மலையாளமும் தமிழும் சரிசமமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், தமிழ் ‘டப்பிங்’ பதிப்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அனைத்து பாத்திரங்களும் தமிழ் பேசியிருப்பது, கதைக்களத்தில் தென்படுகிற ஒரு வேறுபட்ட அம்சத்தினை இல்லாமல் ஆக்கியிருக்கிறது.
ஒரு கதையாக நோக்கினால், ‘பல்டி’ தருகிற திரையனுபவம் முழுமையற்றதாக உள்ளது. சாந்தனு பாக்யராஜ் ஏற்ற குமார் பாத்திரத்தினைப் பணம் மீது ஆசை கொண்டவர் என்று சித்தரித்த இயக்குனர் உன்னி சிவலிங்கம், அதற்கான பின்னணியைச் சரிவர விளக்கவில்லை.
போலவே, இந்தக் கதையில் பூர்ணிமா பாத்திரம் செய்கிற ‘குயுக்தி’களையும் சரிவரத் திரையில் சொல்லவில்லை. அதனால், சில விஷயங்களை நாமாக யூகிக்க வேண்டியிருக்கிறது.
ஒருவேளை ’பல்டி’ இரண்டாம் பாகத்தில் அவற்றைச் சொல்லிக் கொள்ளலாம் என்று இயக்குனர் நினைத்திருந்தால், அவருக்கு ‘ஸாரி’ சொல்ல வேண்டியிருக்கும். ஏனென்றால், ‘பாதி இருக்குது.. மீதி எங்க’ என்று ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நாகேஷ் வசனம் பேசுவது போன்றே இப்படத்தின் திரைக்கதை உள்ளது. பின்பாதிக் காட்சிகள் எதிலும் முழுமை இல்லை.
திரைக்கதையில் வரும் ‘ஆக்ஷன்’ காட்சிகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை ‘ட்ராமா’, ‘த்ரில்லர்’ வகைமையை வெளிப்படுத்துகிற இடங்களில் இயக்குனர் அளிக்கவில்லை.
அதனை மீறிச் சில சண்டைக்காட்சிகள் நம்மை ஈர்க்கின்றன. குறிப்பாக, ஹோட்டலில் நடக்கிற சண்டைக்காட்சி ‘உறியடி’யில் வரும் காட்சியில் பிரதிபலிப்பாக உள்ளது.
திரையனுபவம் ஓரளவுக்கு ‘சுமூகமாக’ அமைகிற வகையில் தனது பங்களிப்பைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர். அவரது ‘ஜாலக்காரி’, ‘பல்டி’ உள்ளிட்ட பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை அபாரமாக இருக்கிறது.
அலெக்ஸ் ஜே.புலிக்கல்லின் ஒளிப்பதிவு, ஆஷிக்கின் தயாரிப்பு வடிவமைப்பு, சிவகுமார் பணிக்கரின் படத்தொகுப்பு மற்றும் ஆக்ஷன் சந்தோஷ், விக்கியின் சண்டைக்காட்சி வடிவமைப்பு எனத் தொழில்நுட்ப அம்சங்கள் சரியான வகையில் ஒன்றிணைந்து சிறப்பான திரையனுபவத்தைப் பெறக் காரணமாகியிருக்கின்றன.
டி.டி.ராமகிருஷ்ணன் உடன் இணைந்து இப்படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார் உன்னி சிவலிங்கம்.
முன்பாதியின் நீளத்தைச் சுருக்கி, பின்பாதியை இன்னும் விரிவாக்கி, இப்படத்தின் கிளைமேக்ஸுக்கு பின்னிருக்கும் சில விஷயங்களையும் யோசித்துச் சேர்த்திருந்தால் ‘பல்டி’ தருகிற திரை அனுபவம் ’சாகசமாக’ மாறியிருக்கும்.
ஒரு பக்கம் ‘கபடி’ விளையாடுகிற இளைஞர்கள், இன்னொரு பக்கம் கந்து வட்டியால் எளியவர்கள் வாழ்வை சிதைக்கிற கும்பல்கள் இரண்டையும் காட்டிவிட்டு, கதை நிகழ்கிற களத்தில் வாழும் எளிய மக்களைக் காட்டத் தவறியிருக்கிறது ‘பல்டி’. இப்படத்தில் வரும் ‘ஆக்ஷன்’ எபிசோடுகள் சிலருக்குப் பிடித்துப் போகலாம். இதர பார்வையாளர்களைப் பொறுத்தவரை, இது வேடிக்கைக்கு உரிய விஷயம் என்றளவில் கூட இல்லை என்பதே உண்மை.