தமிழில் ரஜினி, கமலின் சாம்ராஜ்யம் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து வருவது போல, தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா உள்ளிட்ட சில நட்சத்திரங்களின் இருப்பு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, பாலகிருஷ்ணாவின் படங்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற கணக்கில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.
அவரது சமீபத்திய படங்களில் ‘அகண்டா’, ‘பகவந்த்கேசரி’ ஆகியன குறிப்பிடத்தக்க படைப்புகளாக அமைந்தன. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் வெளியான ‘அகண்டா’ படத்தைத் தமிழ், மலையாளம் உட்படப் பிற மொழி ரசிகர்களும் ரசித்துக் கொண்டாடினர்.
பாலகிருஷ்ணாவின் படங்களில் தவறாமல் இடம்பிடிக்கிற சில விஷயங்கள் அதில் மிகச்சரியான விகிதத்தில் நிறைந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.
அதனைத் தந்த பொயப்பட்டி சீனுவின் இயக்கத்தில், மீண்டும் பாலகிருஷ்ணா ‘அகண்டா 2’வில் நடித்திருக்கிறார். பவன் கல்யாணின் ‘தே கால் ஹிம் ஓஜி’ இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தோடு ‘அகண்டா 2’வும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் வெளியீடு திடீரென்று தள்ளிவைக்கப்பட்டது. விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவுறாததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜனவரி 14 அன்று ‘சங்கராந்தி’ (பொங்கல்) பண்டிகையை ஒட்டி அப்படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது ‘அகண்டா 2’ வரும் டிசம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
’தே கால் ஹிம் ஓஜி’ படத்தோடு இணைக்கப்பட்டுள்ள ‘அகண்டா 2’ டீசரில் இது தொடர்பான அறிவிப்பு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று அத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
’அகண்டா’ படத்தில் வழக்கமான ஹீரோயிசம் சார்ந்த நாயக பாத்திரம் மட்டுமல்லாமல் அகோரி பாத்திரத்திலும் நடித்திருந்தார் பாலகிருஷ்ணா. இருவரும் இரட்டையர்களாகக் காட்டப்பட்டிருந்தனர். அந்த படத்தின் தொடர்ச்சியாக இது இருக்கும் என்று சொல்லப்படுவதால், ‘அகண்டா 2’வை ரொம்பவே எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
”அதனாலதான் ‘தே கால் ஹிம் ஓஜி’ படத்தோட வெளியிட வேண்டாம்னு தள்ளிவச்சிட்டீங்களா” என்று சில வாரங்களாகப் பத்திரிகையாளர்கள் எழுப்புகிற கேள்விக்கு இதுவரை இப்படக்குழு பதிலளிக்கவில்லை..!