யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் தன்னை அவதூறாகப் பேசியதாகவும், அவர் பேசிய அந்த வீடியோவை நீக்கக் கோரியபோது தன்னிடம் ரூ. 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ‘ரெட் அண்ட் பாலோ’ பட இயக்குநர் ஆயிஷா சாதிக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் தனபால் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு இன்று (டிசம்பர் 26) விசாரித்தது.
அப்போது சவுக்கு சங்கருக்கு, அவரது மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு 2025 டிசம்பர் 26 ல் முதல் 2026 மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதோடு சங்கர் தனது பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்படக் கூடாது என்று நிபந்தனைகள் விதித்தனர்.
சட்டத்தை தனிநபர்களை குறிவைக்க பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? புகார் செய்த அடுத்த நாள் அதிகாலையிலேயே சவுக்கு சங்கரை கைது செய்ததன் நோக்கம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.
