தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்களது பிரச்சாரத்தை தீவரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் அதிமுக – பாஜக கூட்டணி தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பாஜக தேசிய துணைத் தலைவரும், பாஜக மேலிட பொறுப்பாளருமான பைஜெயந்த் பாண்டா மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று காலை சந்தித்தனர்.

காலை 10.40 முதல் 11.40 வரையில் சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பில் பல முக்கிய விசயங்களை பேசியுள்ளனர்.
அப்போது, ‘2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நமது கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும். இது டெல்லி தலைமையின் விருப்பம்’ என பைஜெயந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ”வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மதுரையில் ’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பாஜகவின் பிரச்சார தொடக்க விழாவில் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் தாங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளனர்.
அதில் எடப்பாடி பழனிசாமியும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக உறுதி கொடுத்துள்ளார் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
இதற்கு முன்பு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றவுடன் செப்டம்பர் 21 ஆம் தேதி நயினார் நாகேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்,மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சேலம் இல்லத்தில் சந்தித்து மதுரையில் துவங்கும் பயணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிகழ்சிகள் பங்கேற்க வேண்டியிருந்ததால் கலந்துக்கொள்ளவில்லை. எனினும் அங்குள்ள நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என பதில் சொல்லியிருந்தார். அதன்படி அதிமுக நிர்வாகிகளும் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது